Sunday, 29 March 2020

mazhalaikku vazhthu

மழலைக்கு  வாழ்த்து 

ஆலயத்தின்  மணியோசை  பிறந்த நாள் 
வாழ்த்தொலித்து  அடுத்தடுத்து  அடிக்கிறது 

பாடுகின்ற  பறவைகளும்  கூவுகின்ற  குயில்களும் 
உனக்காக  பூபாளம்  இசைக்கிறது 

அடுத்தடுத்து  அணிவகுத்து  வருகின்ற 
அலைகளெல்லாம்  தப்பாமல்  
உன்  பெயரை  எழுதி  தாளமடிக்கிறது 

காவிருக்கும்  பூக்களெல்லாம்  கணக்கின்றி  பூத்து
நின்று  உன்  கூந்தலுக்கு  தவமிருக்கிறது 

முகில்கிழித்து  வெளிவந்த  முழுமதியோ 
உன்  முகப்பொலிவில்  மயங்கி 
முத்த மழை பொழிகிறது 

வானத்து  விண்மீன்கள்  வரிசையிலே 
வந்துநின்று  உனை  வாழ்த்திச் செல்கிறது 

வீசுகின்ற  தென்றலும்  உன்  வாசல் வரை வந்து
வாஞ்சையோடு  உனை  வருடி  வாழ்த்துக்கள்  சொல்கிறது

கதிரவனும்  காலையிலே  கணக்காக  எழுந்து வந்து
கண்ணே  உனை  வாழ்த்துகிறது     

இயற்கையெல்லாம்  உனை  வாழ்த்தி விட  
தவழ  வைத்த  மண் பெருமை 
தரணியெங்கும்  எதிரொலிக்க  
அமுதமென்னும்  தமிழ் கொண்டு
அன்பே  உனை  வாழ்த்துகிறேன் 

வருங்காலம்  நமதென்று  புவியாள  
வந்தவளே  பறை சாற்று 

இனமான  உணர்வு  தமிழர் 
இல்லமெல்லாம்  - அவர் தம் 
உள்ளமெல்லாம்  வளர  
பேரிகையை  முழக்கு 

வாழ்க  வளமுடன் 
பல்லாண்டு  நலமுடன்      


                                                                               ----த . சத்தியமூர்த்தி 

No comments:

Post a Comment