Sunday, 23 July 2023
Sunday, 9 July 2023
Nermai
நேர்மை
உண்மை உறங்கும் நேரம்
பொய்மை இங்கே தலை விரித்தாடுகிறது
பஞ்சையாய் , பராரிகளாய் , பாமரர்கள் வாழ்வதற்கு
நேர்மையற்ற சமூகமே காரணமாகிறது
வாய்மையைத் தொலைத்ததால் மக்களின்
வாழ்வில் வறுமை சூழ்ந்தது
கலப்படம் , பதுக்கல் , கடத்தல் அத்தியாவசியப்
பொருட்களின் விலையை உயர்த்தியது
மனிதாபமற்ற மக்களில் சிலரின் மனநிலையோ
பணத்தை நோக்கி பயணமாகிறது
உண்மை ஒரு நாள் வெளிச்சத்திற்கு வரும் என்ற
அச்சமின்றி தவறு மேல் தவறு செய்கிறது
எல்லாமும் எங்களுக்கே என கிடைத்தவர்கள்
சுருட்டுவது வழக்கமாகிறது
சட்டமும் , நீதியும் , பணம் படைத்தவர்களை
அரணாய் பாதுகாக்கிறது
இளைத்தவனைப் பார்த்து கொழுத்தவன்
கொழுப்போடு கொக்கரிக்க முடிகிறது
சமூகத்தில் நடப்பதையெல்லாம் சாமானியனால்
ஏக்கத்தோடு மட்டுமே பார்க்க முடிகிறது
என்றாவது ஒரு நாள் ஏழைக்கும் விடியல்
கீழ்வானில் முளைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது
சத்தியம் மட்டுமே சத்தியமாய் நிலைக்கும்
என்பதை வரலாறு சாட்சியாய் சொல்கிறது
நேர்மை என்னும் அணையா விளக்கு மீண்டும்
மக்களின் நெஞ்சங்களில் சுடர் விடும் நன்னாளே
வாய்மையை வரவேற்கும் திருநாளாகும் ..
--த .சத்தியமூர்த்தி
Sunday, 2 July 2023
Sunday, 11 June 2023
Kadum Kodai
கடும் கோடை
கோடையின் தாக்கம் கொளுத்தும் வெயிலால்
மக்களை வாட்டி வதைக்கிறது
விண்கலங்களை ஏற்றிக்கொண்டு, கடும்வேகத்தில் ராக்கெட்
வான் மண்டலத்தில் ஓட்டை போடுவதால் வெப்பத்தின்
தாக்கம் அதிகரிக்கிறது
மேலைநாடுகள் தங்கள் வான் மண்டலத்தைப் பாதுகாக்க
தங்கள் விண்கலங்களை இந்தியாவிடம் தந்து விண்ணில்
செலுத்துவதால் நம் வான் மண்டலம் பாதிப்புக்குள்ளாகிறது
மணலை அள்ளுவது , கனிமங்களை வெட்டுவது ,
மலையைக் குடைவது, இப்படி இயற்கையை அதிகாரவர்க்கம்
கொள்ளையடிக்கும் போது , தட்டிகேட்காத மக்களை இயற்கை
இதுபோல காலம் பார்த்து கடுமையாக தண்டிக்கிறது
மரக்கன்றுகளை நடுவது , பராமரித்து வளர்ப்பது ,
நீர்நிலைகளைப் பாதுகாப்பது இவைதான் வெப்பத்தை
தணிக்க உதவும்
மழைக்காலத்தில் பெருகிவரும் மழைநீரை சேமிக்க
வழிசெய்யாமல் வீணாக பெரும்பகுதி
கடலில் கலப்பதாலும் , நீராதாரம் வெகுவாகக் குறைந்து
வடஇந்தியாவைப் போன்ற கடும் வெப்பம்
நம் தமிழகத்தில் உள்ளது
நம் முன்னோர்கள் இயற்கையோடு இணைந்து தங்கள்
வாழ்வை அமைத்துக்கொண்டதால் கடந்த
களங்களில் இதுபோன்ற வெயில் கிடையாது
இனியாவது விழித்துக்கொண்டு நீர்நிலைகளை தூர்வாறி
மழைநீரை சேமிப்போம்
பாலைவனம் போல் நம் தமிழ் மண்ணை மலடாக்காமல்
எப்போதும் ஈரத்தோடு இருக்க பாதுகாப்போம்
தன்னை வெட்டுபவனைக் கூட தாங்கி நிற்கும்
தயாள குணம் படைத்தது நம் தமிழ் மண்
மரம் நடுவோம் . மழை பெறுவோம் .
வெய்யில் தானாக தணியும் ..
--த .சத்தியமூர்த்தி
Saturday, 27 May 2023
Kudi Magangaluku
குடி மகன்களுக்கு
கல் தோன்றி , மண் தோன்றா காலத்தே
முன் தோன்றிய மூத்தக்குடி எம் தமிழர் குடி
உலகுக்கே நாகரிகத்தைக் கற்றுத்தந்த
கட்டுப்பாடு மிக்க ஓர் குடி என் தமிழர் குடி
இத்தனை சிறப்புமிக்க தமிழினம் ஒரு சில
அரசியல்வாதிகளின் சூழ்ச்சிக்கி இரையாகி
கோடிகோடியாக கொள்ளையடிக்க , மக்களிடம்
கடந்த நாற்பது ஆண்டுகளில் திராவிட அரசுகள்
மதுவுக்கு அடிமையாக்கி , மதியை இழக்கவைத்து
நடைப்பிணமாய் தள்ளாட வைத்துள்ளார்கள்
குடி குடியைக் கெடுக்கும்
குடி குடும்பத்தின் மகிழ்ச்சியைக் கெடுக்கும்
குடி மெல்ல மெல்ல உயிரைக் குடிக்கும்
குடி குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்தும்
குடியின் மூலம் வருவாயைப் (தங்கள்) பெருக்கி
தமிழினத்தை நாசமாக்குவதே
திராவிட மாடலின் சாதனையாகும்
குடிப்பதற்கு முன்னால் உங்களின் சிந்தனைக்கு
46000 கோடி ரூபாயை உங்களிடமிருந்து, சாமர்த்தியமாக
சுரண்டுகின்ற , உறிஞ்சுகின்ற , அரசின்
திட்டத்திற்கு துணைபோகாதீர்கள்
ஊர்க் குடியைக் கெடுத்துவிட்டு தங்கள் குடி மட்டும்
வசதியாக வாழும் என்று யாரும் கனவு காணாதீர்கள்
காலம் உங்களைக் கடுமையாக தண்டிக்கும்
மதுவிலிருந்து மீண்டு வந்து தமிழர்களே குடும்பத்தோடு
மகிழ்ச்சியாக வாழ முயற்சி செய்யுங்கள்
மதுயெனும் அரக்கனின் பிடியிலிருந்து தமிழினம்
விடுபடும் நாளே எம் இனத்தின் திருநாளாகும்
அந்நாளை நோக்கி நம்பிக்கையோடு நகர்வோம்
---த .சத்தியமூர்த்தி
Sunday, 7 May 2023
penne ! vazhga nee pallandu !!
பெண்ணே ! வாழ்க நீ பல்லாண்டு !!
மஞ்சளும் , குங்குமம் சூடி , மணமாலை கழுத்தில் ஏந்தி ,
மங்கள நாண் பூண்டு , கண்ணுக்கு ஒத்த
கணவனோடு குடும்பம் என்னும் , படகில்
பயணிக்கும் குலமகளே ! வாழ்க நீ பல்லாண்டு !!
கதிரவன் எழும்பும் காலை நேரத்தில் கன கச்சிதமாய்
எழுந்து , குளித்து நீராடி ,பால் பொங்கவைத்து
பல்வேறு பலகாரம் செய்து , வயிறார படைத்து
உண்ணும் அழகைப் பார்க்கும் உத்தமியே ! வாழ்க நீ பல்லாண்டு !!
குடும்பச்சுமையை , குதூகலத்துடன் சுமந்து ,
வருங்காலச் சந்ததியை வயிற்றினில் சுமந்து ,
அதோடு ஓடியாடி, வேலையும் செய்து தாய்மை
பூரித்து நிற்கும் மனையாலே ! வாழ்க நீ பல்லாண்டு !!
பெற்றெடுத்த குழந்தையை கையில் சுமந்து
வாரியெடுத்து அமுதமெனும் பால் கொடுத்து
மார்போடு அணைத்து , மழலை மொழிபேசும்
குழந்தைக்கு முத்தமீந்து , கொஞ்சி மகிழ்ந்து
குழந்தையோடு குழ்நதையாய் மாறிய
குலக்கொழுந்தே ! வாழ்க நீ பல்லாண்டு !!
பள்ளிக்கு அனுப்ப , அத்தனையும் பார்த்து பார்த்து செய்து
வளரும் குழந்தையோடு வேலை செய்த களைப்பில்
தேகம் இளைத்து , வாலிபத்தை கொஞ்சம் கொஞ்சமாக
கடக்கும்போது கணவன் , மகள் என
குடும்பத்துக்காக கரையும் மெழுகுவர்த்தியே !
வாழ்க நீ பல்லாண்டு !!
நல்ல வரன் அமைந்தால் திருமணத்தை நல்லபடி
நடத்திவிட , அதற்கான முனைப்பில்
ஜாதகத்தைக் கையிலெடுத்து , அதற்கான வேலையில்
இறங்கி மகளை நல்ல இடத்தில் மணமுடிக்க
ஓடியாடும் திருமகளே !
வாழ்க நீ பல்லாண்டு !!
மங்கள நாண் சூடி மகள் , தன் மணாளனோடு
புதுவாழ்வு துவக்கி தன் புது மனையில்
தாயைபபோலவே குடும்பம் என்னும்
படகில் பயணிக்கப் புறப்பட்டாள்
குடும்பத்திற்காகவே வாழும்
குலமகள்களே ! வாழ்க நீங்கள் பல்லாண்டு !!
--த .சத்தியமூர்த்தி
Sunday, 30 April 2023
May 1
மே 1
உழைக்கும் பெருமக்களின் உன்னத தினம்
தொழிலாளர்கள் தங்கள் உரிமைக்காக
முன்னெடுத்த நீண்ட நெடிய போராட்டம்
வெற்றிமுரசு கொட்டியதைக் கொண்டாடிய தினம்
உழைப்பாளர் சிலையை நிறுவி உழைப்பின்
மேன்மையை உலகுக்கு உணர்த்தியவர்கள்
எட்டு மணிநேர வேலை , போனஸ் , கூடுகள் வேலை
நேரத்துக்கு கூடுதல் ஊதியம் என பலவும்
போராடிப்பெற்ற உரிமைகள்
குறைந்த விலைக்கு குத்தகை நிலம் , தங்குதடையில்லா
மின்சாரம் , குறைந்த ஊதியத்திற்கு தொழிலாளர்கள் ,
மானியம் , வரிச்சலுகை , வங்கிகளில் கடன் ,
இத்தனையும் கிடைப்பதால் தான் பன்னாட்டு நிறுவனங்கள்
நம் நாட்டை நோக்கி வருகிறார்கள்
பன்னாட்டு நிறுவனங்களுக்காக தொழிலாளர் வேலை
நேரத்தை எட்டு மணியிலிருந்து 12 மணிநேரமாக
அவசர கதியில் சட்டமியற்றி எழுந்த கடும்
எதிர்ப்பால் தற்சமயம் நிறுத்தி வைத்து உள்ளார்கள்
கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில் வணிகம்
செய்ய வந்த வெள்ளையர்கள் நம்மை அடிமைப்படுத்தி
பின் நாட்டையும் அடிமைப்படுத்தினார்கள்
இது வரலாறு
மக்கள் தேர்ந்தெடுத்த அரசு மக்களுக்கு மட்டும் தான்
விசுவாசமாக இருக்க வேண்டும்
தொழிலாளர் உரிமைகள் தொடர்ந்து பாதுகாக்க
மே 1ல் சூளுரைப்போம்
வாழ்க ! உழைப்பாளர் தினம்
ஓங்குக ! தொழிலாளர் ஒற்றுமை
வெல்க ! உழைப்பாளர் உரிமைகள்
---த .சத்தியமூர்த்தி
Sunday, 16 April 2023
Kadalodi thamizhargal
கடலோடி தமிழர்கள்
திரைக்கடலோடி திரவியம் தேடிய
கிரேக்கம் , யவனம் , பாரசீகம் என
உலகமுழுவதும் கடலோடிய மூத்த குடி
நம் இனமானமிக்க தமிழ் குடி
பண்டைய தமிழர்கள் கடல் ஆமையை வழித்தடத்திற்கு
பயன்படுத்தி , நீண்டதூரம் கடலில் பயணித்தார்கள்
கால்கோள் ஏற்பட்டு , நிலப்பரப்பு தன் நிலையை
மாற்றியதால் இன்று உலகமுழுவதும்
பரவி வாழும் தமிழினம் நாகரிகத்தை
உலகுக்குக் கற்றுத்தந்த இனம்
தமிழும் , தமிழரும் தொன்றுதொட்டு
யுகம் யுகமாய் தொடர்ந்து வருபவர்கள்
கலை , இலக்கியம் , பண்பாடு இவற்றில்
கோலோச்சியவர்கள் தமிழர்கள்
மானம் , காதல் , வீரம் இவற்றை வாழ்வில்
தமிழர்கள் தங்கள் மூச்சாக கொண்டவர்கள்
வந்தாரை வாழவைக்கும் பண்புநலம் மிக்கவர்கள்
பகைவர்க்கும் அருள்வாய் நன்னெஞ்சே
எனப் பாடியவர்கள்
வாடிய பயிரைக் கண்டபோது வாடிய
கருணையாளர்கள்
இருப்பதை அள்ளிக் கொடுக்கும்
கொடையாளர்கள்
அன்பு , அறிவு ,அடக்கம், பண்பு இவற்றின்
கலவையே தமிழர்கள்
கடலோடு வாழ்வை இணைத்ததனால்
பரங்கியரை எதிர்த்து கப்பலோட்டிய தமிழர்கள்
இத்தனை சிறப்புமிக்க, உலகமெங்கும்
பரவிவாழும் எம் தமிழ் சொந்தங்களுக்கு
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ..
-த .சத்தியமூர்த்தி
Sunday, 19 March 2023
Mudhalvar NithishKumar இனப்பற்று
முதல்வர் நிதிஷ்குமாரின் இனப்பற்று
நாடு விடுதலைக்குப் பிறகு எந்தவொரு கட்டுமானத்தையோ ,
கல்வி நிறுவனங்களையோ, தொழிற்கூடங்களையோ ,
வசதி வாய்ப்புகளையோ, உருவாக்காமல் பீஹார் அரசுகள் கடந்த
காலங்களில் மக்களை மதுவுக்கு அடிமையாக்கி ,
கோடிகோடியாக கொள்ளையடித்து மக்களின்
வாழ்க்கையைச் சுரண்டிப்பிழைத்தார்கள்
நிதிஷ்குமாரின் வருகைக்குப் பிறகு மதுவிலக்கை
அமுல்படுத்தி, மாநிலத்தை அக்கறையோடு கவனித்தாலும்
அம்மாநில மக்கள் பிழைப்புக்காக அண்டை மாநிலம் மற்றும்
தமிழகம் நோக்கி தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள்
இந்த நிலையில் பீஹாரில் அவர்களாகவே ஒரு புரளியைக்
கிளப்பி , அதன்மீது விசாரணைக்காக அவர்களாகவே ஒரு
குழுவை அனுப்பி, தமிழகத்தில் பீஹாரிகள் மற்றும் வடமாநில
தொழிலாளர்கள் பாதிப்பு போல ஒரு பிம்பத்தை உருவாக்குகிறார்கள்
வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தில் அதுபோல ஒரு நிலை
இல்லையென்றாலும் அவர்களுக்கு விளக்கமளித்தது
தமிழர்களின் பெருமையை உலகுக்கு பறைசாற்றியது
கடந்த காலத்தில் ஆந்திரத்தில் தமிழர்கள்மீது துப்பாக்கிசூடு
கர்நாடகத்தில் கடும் தாக்குதல் ,
தமிழக மீனவர்கள் மீது தொடர்தாக்குதல்
இதன்மீது தமிழக அரசு எடுத்த நடவடிக்கை ?
தமிழர்கள்மீது தாக்குதல் எங்கு நடந்தாலும்
நம் முதல்வர் ஒரு குழுவை அந்த மாநிலங்களுக்கு
அனுப்பி தமிழரைப் பாதுகாக்கவேண்டும்
வழிகாட்டிய நிதிஷ் குமாருக்கு நன்றி
---த .சத்தியமூர்த்தி
Saturday, 4 March 2023
Naattu Nadapu
நாட்டு நடப்பு
ஆன்மிகம் என்னும் போர்வைக்குள் ஆயிரம்
தில்லுமுல்லு செய்யும் கார்ப்பரேட் சாமியின்
சிவராத்திரி குத்தாட்டம் வெகு ஜோரு
விண்ணை முட்டும் விலைவாசி உயர்வால்
பட்டினியோடு போராடும் ஏழைகளின்
கண்ணீரைப் பற்றி கவலைப்படாத
அரசுகளின் ஆணவப்போக்கு வெகு ஜோரு
ஜாதியாலே , மதத்தாலே மக்களை பிளவுபடுத்தி
அரசியல் அதிகாரம் பெற்று ஆளவட்டம் போடும்
அரசியல்வாதிகளின் சாமர்த்தியம் செம ஜோரு
பெண்களின் மீது தொடரும் பொள்ளாச்சி போன்ற
பாலியல் குற்றவாளிகளைக் காப்பாற்ற
அரசு இயந்திரம் காட்டும் முனைப்பு வெகு ஜோரு
வெட்கித் தலைகுனியும் வேங்கைவயல் போன்ற
சம்பவத்தில் அரசின் மெத்தனப் போக்கு வெகு ஜோரு
தூத்துக்குடி துப்பாக்கிசூட்டிற்கு நீதிவிசாரணை வேண்டி
போராடியும் ஒன்றும் நடவாவது வெகு ஜோரு
பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களையெல்லாம்
அதானியும் , அம்பானியும் ஆட்டையைப் போட்டு
இந்தியாவையே விலைக்கு வாங்கி மன்னரைப்போல
வலம் வருவது வெகு ஜோரு
கோடிகோடியாய் செலவுசெய்து , மக்களையெல்லாம் அழைத்துவந்து விருந்துவைத்து பரிசுப்பொருட்களை அள்ளித்தந்து
வெற்றியை விலைக்கு வாங்கி கொண்டாட்டம் போடுவது வெகு ஜோரு
கள்ளக்குறிச்சியில் இன்னும் குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்யாது
குற்றவாளிகளைப் பாதுகாப்பது வெகு ஜோரு
மந்தைகளாய் உள்ள மக்களெல்லம்
மண்ணின் விடுதலைக்காக மீண்டுமொருமுறை
போராட எழுந்துவரும் பொன்னாலே
உண்மையான ஜனநாயம் வெல்லும் திருநாளாகும்
--த .சத்தியமூர்த்தி
Sunday, 19 February 2023
மேதகு
மேதகு
முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பின்
கொஞ்சம் கொஞ்சமாக ஈழமக்கள் தங்களை
தாங்களே காத்துக்கொள்ளும் அவல நிலையில் ,
புலிகளின் சார்பாக தமிழகத்தில் அறிக்கை வெளியிட்டது ஏன் ?
இரத்தமும் , சதையுமாய் புதைகுழிக்குள் புதைந்த
ஈழத்து மக்களின் சவக்குழியின் மேல் நின்று
அரசியல் சதிராட்டம் ஆடுவதேன் ?
விடுதலைப்புலிகளுக்கான தடையைத் தொடரவா ?
நாட்டைவிட்டு ஓடிய இராஜபக்க்ஷேவுக்கு மறுவாழ்வு கொடுக்கவா ?
புத்த பிக்குகள் மீண்டும் வெறியாட்டம் போடவா ?
இலங்கை இராணுவம் வைப்பற்றிய நிலத்தை அபகரிக்கவா ?
ஈழத்தமிழரின் மேல் வன்மம் கட்டவிழ்த்து விடவா ?
புலம் பெயர்ந்த தமிழருக்கு நெருக்கடி கொடுக்கவா ?
புறநானூற்றில் படித்த சங்ககால தமிழரின் வீரத்தை
நம் கண் முன்னே உண்மையென நிரூபித்து ,
களத்திலே தம் குடும்பம் முழுவதையும் தியாகம் செய்த
மாவீரனை யாரும் கொச்சைப் படுத்த வேண்டாம்
தேசியத்தலைவர் பிரபாகரன் மீண்டுவந்தால்
ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் மகிழ்ச்சி தான்
ஈழத்தமிழர்கள் இனியாவது நிம்மதியாக வாழ
தமிழ் மண்ணில் திருவாய் மூடி இருங்கள்
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை தடுத்து நிறுத்தும்
சக்தியற்ற நம்மால் அவர்களுக்கு சங்கடம் வேண்டாம்
துரோகிகளின் பட்டியல் கருணாவின்
பெயரோடு முடியட்டும்
இலங்கைத் தமிழர்களுக்கு இனியாவது
விடியல் பிறக்கட்டும்
வாழ்க தமிழினம் !! வெல்க தமிழினம் !!
வாழ்க மேதகு மாவீரன் பிரபாகரன் !!
-த .சத்தியமூர்த்தி
Sunday, 12 February 2023
kudumbam
குடும்பம்
நல்லதொரு குடும்பம் - ஒரு
பல்கலைக்கழகம்
குடும்பம் ஒரு கோயில்
அன்பெனும் தீபம் சுடர் விடும் போது
குடும்பம் ஒரு கதம்பம்
இன்பமும் துன்பமும் கொட்டிக் கிடப்பதால்
தாயெனும் தெய்வத்தின் உழைப்பாலே பத்திரமாய்
பாதுகாப்பாய் இருக்கும் குடும்பம்
கட்டுக்கடங்காத காளையை
பொட்டிப் பாம்பாக மாற்றுவது குடும்பம்
கணவனும் மனைவியும் கட்டியெழுப்பும்
காதலெனும் கோட்டையே குடும்பம்
மழலைகளோடு மகிழ்ச்சி கரை புரண்டோடும்
கற்பகத்தருவே குடும்பம்
வாழையடி வாழையென தலைமுறையைக்
கடத்துகின்ற பெட்டகமே குடும்பம்
அகில உலகிற்கும் பாரதத்தின் மீதான பிரமிப்பே
உறவுகள் மகிழ்வோடு கூடி வாழும் குடும்பம்
பரம்பரையாய் குலசாமிக்கு பொங்கலிட்டு , குலவையிடும்
பாரம்பரிய பெருமை மிகு குடும்பம்
சமூகத்தை இணைக்கின்ற பாலமாக சங்ககாலம்
தொட்டு தொடர்கின்ற குடும்பம்
பசப்பிணைப்போடு ஒருவர் மீது ஒருவர்
அக்கறைக் கொள்ளும் அன்பு நிறைந்த குடும்பம்
இந்தியக் குடும்பம் இருப்பதைக் கொடுக்கும்
பண்பு நிறைந்த பாசமிகு குடும்பம்
பாரதம் என்னும் ஒற்றைக் குடையின் கீழ்
ஒரே குடும்பமாய் நாம் இணைவோம்
மகிழ்ச்சியுடன் நிறைவாய் வாழ்வோம்
---த .சத்தியமூர்த்தி
Sunday, 5 February 2023
Pathavi
பதவி
ஏற்றி விட்ட ஏணியை
எட்டி உதைப்பது பதவி
பத்து தலைமுறைக்கு சொத்து சேர்க்கும்
பகடைக்காயே பதவி
படிப்பறிவில்லாத பாமரனும்
பந்தாவாக வலம் வர செய்வது பதவி
நாட்டு மக்களின் வரிப்பணத்தை
ஏப்பம் விட வைக்கும் பதவி
படித்தவன் , பணக்காரன் எல்லோரையும்
கூழைக்கும்பிடு போட வைக்கும் பதவி
ஓட்டுக்கு காசு கொடுத்து மக்களை
விலைக்கு வாங்கும் பதவி
அதிகார போதையில் அத்தனைப் பேரையும்
அடக்கி வைத்திடும் பதவி
லஞ்சம் என்பதை தேசிய மயமாக்கிய
லட்சியம் கொண்டது பதவி
ஜாதியாலே , மதத்தாலே , மக்களைக்
கூறு போட்டது பதவி
மமதையோடு மக்களையெல்லாம் புழு , பூச்சாக
பார்க்க வைத்திடும் பதவி
கொள்ளையடிப்பதைக் கொள்கையாக
கொண்டவனுக்கே பதவி
ஏமாந்ததெல்லாம் போதும் .இனியாவது
தகுதியானவனுக்கே போகுமா பதவி ?
மக்களுக்கான தலைவனைத் தேர்ந்தெடுப்பதே
மக்களின் தலையாய கடமையாகும்
நல்லவனுக்கு வாக்களிக்கும் - புதிய
தலைமுறையை உருவாக்குவோம்
---த .சத்தியமூர்த்தி
Sunday, 29 January 2023
Manam
மனம்
மனத்துக்கண் மாசிலனாதல் - அனைத்தறன் ஆகுல
நீர பிற -- வள்ளுவன் வாக்கு
உள்ளத்தளவில் ஒருவன் குற்றமற்றவனாய் இருந்தால் போதும்
மேற்கொண்டு எந்த அறமும் செய்யத் தேவையில்லை
மனமது செம்மையானால் மந்திரம் எதுக்கு ?
மனமிருந்தால் மார்க்கம் உண்டு
மனம் போல் மாங்கல்யம்
மனம் போல் வாழ்வு
மனமே ! நீ கொஞ்சம் இளைப்பாறு !!
மனமே ! நீ கொஞ்சம் களைப்பாறு !!
மனம் ஒரு குரங்கு - ஆட்டுவிக்கும்
ஆடவைக்கும் நம்மை மாட்டவைக்கும்
மனம் ஒரு கண்ணாடி - நம் எண்ணத்தைப் பிரதிபலிக்கும்
மனம் ஒரு குதிரை - நமக்கு குழிப் பறிக்கும்
மனம் ஒரு இயந்திரம் - சதா இயங்கிக்கொண்டே இருக்கும்
மனம் ஒரு காற்றாடி - அலைந்து திரிந்து சிக்கிக்கொள்ளும்
மனம் ஒரு பறவை - பறந்துக்கொண்டே இருக்கும்
மனம் ஒரு பந்து - குதித்துக்கொண்டே இருக்கும்
மனம் ஒரு நரி - தந்திரம் செய்துகொண்டே இருக்கும்
மனம் ஒரு பச்சோந்தி - மாறிக்கொண்டே இருக்கும்
மனதைப் பக்குவப்படுத்த உயர்வு உண்டு
மனதை அடக்கிப் பழக நிம்மதி உண்டு
மனதோடு உறவாட மகிழ்ச்சி உண்டு
மனதில் உறுதி இருந்தால் வெற்றி உண்டு
மனம் ஒரு பொக்கிஷம் பாதுகாத்துக் கொள்வோம்
மனம் ஒரு தெளிந்த நீரோடை நல்லதையே நினைப்போம்
----த .சத்தியமூர்த்தி
Sunday, 22 January 2023
Tamil Nadu
தமிழ் நாடு
செந்தமிழ் நாடெனும் போதினிலே ,
இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே
-- பாரதி வாக்கு
உழவையும் , நெசவையும் உயர்த்திப் பிடித்து
ஊருக்கே உணவளித்த தமிழ் நாடு
தேமதுர தமிழோசை தெருவெல்லாம்
ஒலிக்கச் செய்த தமிழ் நாடு
நெல்லும் , கரும்பும் , மஞ்சளும் மணக்கும்
மாண்புகழ் கொண்ட தமிழ் நாடு
மொழியையும் , மண்ணையும் , விழி போல
காத்த நம் தமிழ் நாடு
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என
போதித்தது நம் தமிழ் நாடு
குடவோலை முறையைக் கொண்டு தேர்தலை
முதலில் நடத்திக் காட்டிய தமிழ் நாடு
கணிதம் ,ஜோதிடம் , வானியல் ,வைத்தியம் ,பரதம்
சிற்பக் கலைகளில் தேர்ச்சிப் பெற்ற தமிழ் நாடு
வீரத்தின் விளை நிலமாய், வெற்றிகளைக் குவித்து
வரலாறு படைத்த நம் தமிழ் நாடு
கடையேழு வள்ளல்களையும் , வாடிய பயிரைக் கண்டு
வாடிய வள்ளலாரையும் கண்டது நம் தமிழ் நாடு
தஞ்சமென்று அடைந்த பறவைக்காக தன் தசையை
அறுத்த சிபிச் சக்கரவர்த்தி வாழ்ந்த தமிழ் நாடு
ஏனைய இடங்களில் பாமரனாய் வாழ்ந்த காலத்திலே
நாகரிகத்தோடு செழித்து வாழ்ந்தது நம் தமிழ் நாடு
காண்பவர் வியக்கும் வண்ணம் கட்டிடக்கலையில்
சாதனைப் படைத்த நம் தமிழ் நாடு
தமிழும் , தமிழரின் வரலாறும் , தமிழ்நாட்டின்
பெருமையும் யுகம் யுகங்களைக் கடந்தவை
தொன்று தொட்டுத் தொடர்பவை - நம்
உயிரோடும் , உணர்வோடும் ஒன்று கலந்தவை
வாழ்க தமிழ் நாடு ! வளர்க தமிழ் நாடு !!
வீறுகொண்டு எழுக தமிழ் நாடு ! வெல்க தமிழ் நாடு !!
----த .சத்தியமூர்த்தி
Saturday, 14 January 2023
Tamil Nadu
தமிழ் நாடு
வள்ளுவன் தன்னை உலகினுக்கு தந்து
வான் புகழ் கொண்ட தமிழ் நாடு
கம்பன் , இளங்கோ , பாரதி என பெருமைமிகு
கவிஞர்கள் வாழ்ந்த தமிழ் நாடு
அமிழ்தினும், இனிய தமிழை சங்கம் வைத்து
வளர்த்து, சாதனை படைத்த தமிழ் நாடு
வந்தாரையெல்லாம் வாழ வைக்கும் பரந்த
மனம் படைத்ததெங்கள் தமிழ் நாடு
மானம் , காதல் ,வீரம் , ஈகை , அறம்
மாண்புகள் நிறைந்த நம் தமிழ் நாடு
சேர , சோழ , பாண்டிய , பல்லவ மன்னர்கள்
ஆட்சி செய்தது நம் தமிழ் நாடு
கடல் கடந்து வணிகம் செய்து , சென்ற இடமெல்லாம்
கோலோச்சி நின்றது நம் தமிழ் நாடு
வானை முட்டும் கோபுரம் அமைத்து
ஆலயம் கட்டியது நம் தமிழ் நாடு
முத்து , பவழம் , நெற்களஞ்சியம் என
கொட்டிக்கிடந்தது நம் தமிழ் நாடு
சித்தர்கள் , ஞானிகள் , யோகிகள் வலம் வந்து
மண்ணை ஞான பூமியாக்கியது தமிழ் நாடு
விருந்தோம்பலை விரும்பியே செய்து அன்போடு
உபசரிக்கும் பண்பான பூமி தமிழ் நாடு
முறத்தால் புலியை விரட்டியடித்த வீரத்தமிழச்சி
உலா வந்த மண்ணே நம் தமிழ் நாடு
ஆராய்ச்சி மணியடித்து , நீதி கேட்ட பசுவிற்காக தன்
மகனை தேரேற்றிக் கொன்று அறம் படைத்த தமிழ் நாடு
-----தொடரும்
புவன முழுவதும் பரவி வாழும் எம் தமிழ்ச் சொந்தங்களுக்கு
மனங்கனிந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ...
---த .சத்தியமூர்த்தி
Saturday, 7 January 2023
Panam
பணம்
பணம் பத்தும் செய்யும்
பணம் பாதாளம் வரை பாயும்
பணமென்றால் பிணமும் வாய் திறக்கும்
பணம் பந்தியிலே , குணம் குப்பையிலே
ஏழையின் சொல் அம்பலம் ஏறாது
ஏழைக்கு ஏது இங்கு வாழ்வு ?
இரும்பு பெட்டிக்குள் பூட்டி வைத்த பணம்
இதயத்தை இரும்பாக்கும்
பத்து தலைமுறைக்கு பணம் சேர்த்தும்
போதுமென்ற மனம் ஒருக்காலும் வராது
மண்ணாசை , பெண்ணாசையைப் போல்
பொன்னாசையும் விடாது
பணத்தோடு பாவத்தையும் சேர்க்கிறோம் என்பது
அடுத்த தலைமுறையின் அவஸ்தையில் புரிகிறது
நேர் வழியில் சேர்த்த பணம் நிம்மதியைத் தரும்
குறுக்கு வழியில் வந்த பணம் வந்த வழியே சென்று விடும்
பணத்தைக்கொண்டு , தர்மம் செய்யாமல்
எண்ணி எண்ணி அடிக்கி வைத்து , அழகு பார்த்து ,
பாவத்தைச் சுமந்தபடி, எதையும் கொண்டு செல்லாமல் ,
சுடலையில் வெந்து சாம்பலாகிறான்
அள்ளி அள்ளித் தந்து வள்ளலாய் வாழ்ந்தவனோ
இறந்த பின்னும் இறவாமல் வாழ்கின்றான்
வாழ்வின் வசதிக்கு பணம் தேவை - ஆனால்
பணம் மட்டுமே வாழ்வை முழுமைப்படுத்தாது
கோட்டைக்குச் சென்று கொள்ளையடிக்கத்தான்
ஓட்டுக்கு பணம் தந்து ஜனநாயகத்தை சாகடிக்கிறான்
கை நீட்டி ஓட்டுக்கு காசுவாங்கியே மக்களில் சிலர்
தங்கள் உரிமையை அடகு வைக்கிறார்
பணம் படுத்தும் பாடு நம் எதிர்கால
தலைமுறையை பாழ்படுத்தும் ..
அளவுக்கு அதிகமாக பணத்தை ஆண்டவன் கொடுத்தது
இல்லாத ஏழைக்கும் சேர்த்துத்தான்-- அதனால்
தாராளமாய் தர்மம் செய்யுங்கள்
தர்மம் செய்வதால் உங்கள் பணம் பன்மடங்கு பெருகும்
---த .சத்தியமூர்த்தி
Sunday, 1 January 2023
Puthande Varuga -2023
புத்தாண்டே வருக -2023
புத்தொளி வீசும் புத்தாண்டே வருக !
வசந்தம் வீசும் நல்லாண்டே வருக !
மக்கள் வாழ்வில் மலர்ச்சி பொங்க வருக !
நாடு முழுதும் மகிழ்ச்சி வெள்ளம் கரை புரள வருக !
கொடுத்துதவும் கொள்கை பரவ வருக !
கோட்டையை ஆள்வோர் நீதி வழியில் ஆளும் ஆண்டாக மலர்க !
நல்லோர் நினைப்பது நடக்கவே கட்டியங்கூறி வருக !
நாளும் , நாளும் வளர்ச்சிப் பாதையில் நாடே வளர வருக !
எங்கும் எதிலும் ஏற்றம் கானவே வருக !
ஏழைகள் வாழ்வில் நம்பிக்கை பெருகும் ஆண்டாக மலர்க !
மங்களம் பெருகி நல்லறம் காண வருக !
மாநிலம் முழுதும் அமைதி தவழ வருக !
சமத்துவம் , சகோதரத்துவம் , சமூகநீதி காக்க வருக !
சாமானியனுக்கும் சகலமும் சென்று சேரும் ஆண்டாக மலர்க !
பாலும் , தேனும் , பெருகி ஓடும் ஆண்டாக வருக !
பழைய கஞ்சிக்கு விடை கொடுக்கும் ஆண்டாக மலர்க !
எல்லார் கையிலும் தாராளமாக பணம் புரளும் ஆண்டாக வருக !
எடுத்த காரியம் யாவும் வெற்றி காணவே வருக !
பழங்கதை பேசும் பழக்கத்தை மற்றும் ஆண்டாக வருக !
பாரத தேசம் வறுமை அகற்றும் ஆண்டாக மலர்க !
எல்லாத்துறையிலும் லஞ்சம் ஒழியும் ஆண்டாக வருக !
ஏன் ? எதற்கு ? எப்படி ? கேள்வி கேட்கும் ஆண்டாக மலர்க !
மக்களாட்சியில் மக்கள் கரங்களே ஓங்கி நிற்கும் ஆண்டாக வருக !
ஆதிக்க சக்திகள் அஞ்சி நடுங்கி அடி பணியும் ஆண்டாக மலர்க !
உழைப்பவனுக்கே உரிமை கிடைக்கும் ஆண்டாக வருக !
ஊர் கூடி தேர் இழுப்போம் . ஒற்றுமையாய் வருக !
----த .சத்தியமூர்த்தி
Subscribe to:
Posts (Atom)