வன்மம் / வக்கிரம்
இந்தியர்கள் அனைவரும் வெட்கித் தலைகுனியும் வகையில்
மணிப்பூரில் மனிதாபிமானமற்ற மாபாதகம் அரங்கேறி உள்ளது
மேலாதிக்கத்தின் வெளிப்பாடு . ஆணாதிக்கத்தின் அநாகரீகம்
பழங்குடி இன மக்கள் எனும் இளக்காரம்
பெண்களை மானபங்கப்படுத்தியது கலவரத்தின்
மிரட்டலின் உச்சக்கட்டம்
எந்த கலவரம் , எங்கே நடந்தாலும் , அங்கே பெண்களும் குழந்தைகளும்
தான் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள்
ஜாதி , மதம் , அரசியல், இவை மக்களை கொடூரமான
மிருகங்களாக்கி வருகிறது
அரசியல் போர்வையாலோ , மதத்தின் பாசத்தாலோ இதுபோன்ற
கயவர்களை தப்ப விடக்கூடாது
எந்த இயக்கமும் இதுபோன்ற கயமைத்தனத்திற்கு
துணையாக இருக்கக்கூடாது
உச்சநீதிமன்றம் தாமாகவே முன்வந்து தலையிட்டது
ஓரளவு நம்பிக்கையைத் தருகிறது
மைய அரசும் , மாநில அரசும் மாநிலத்தில் அமைதி
திரும்ப கடும் நடவடிக்கைளை நேர்மையாக எடுக்கவேண்டும்
நீதித்துறை வழக்கை விரைந்து நடத்தி குற்றவாளிகளுக்கு
அதிகபட்ச தண்டனையை வழங்கவேண்டும்
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில்
கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும்
பெண்கள் நம் தேசத்தின் கண்கள் - அவர்களை
அழவைத்தால் நம் தேசம் இருண்டு விடும்
சர்வதேச அரங்கில் நம் மதிப்பு தாழ்ந்து விடும்
கண்ணகியின் சாபம் அன்று மதுரையை எரித்தது
சீதையின் சாபம் இலங்கையை அழித்தது
பாஞ்சாலியின் சாபம் (சபதம்) கௌரவர்களை ஒழித்தது
ஈழத்து தமிழ் பெண்களின் சாபம் இலங்கையை பிச்சையெடுக்கும்
நிலைக்கு தள்ளியது
பெண்களின் சாபம் பொல்லாதது - அது
நம் தேசத்தையே அழித்துவிடும்
பெண்களைப் பாதுகாப்போம் !
பெண்மையைப் போற்றுவோம் !
---த .சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment