நேர்மை
உண்மை உறங்கும் நேரம்
பொய்மை இங்கே தலை விரித்தாடுகிறது
பஞ்சையாய் , பராரிகளாய் , பாமரர்கள் வாழ்வதற்கு
நேர்மையற்ற சமூகமே காரணமாகிறது
வாய்மையைத் தொலைத்ததால் மக்களின்
வாழ்வில் வறுமை சூழ்ந்தது
கலப்படம் , பதுக்கல் , கடத்தல் அத்தியாவசியப்
பொருட்களின் விலையை உயர்த்தியது
மனிதாபமற்ற மக்களில் சிலரின் மனநிலையோ
பணத்தை நோக்கி பயணமாகிறது
உண்மை ஒரு நாள் வெளிச்சத்திற்கு வரும் என்ற
அச்சமின்றி தவறு மேல் தவறு செய்கிறது
எல்லாமும் எங்களுக்கே என கிடைத்தவர்கள்
சுருட்டுவது வழக்கமாகிறது
சட்டமும் , நீதியும் , பணம் படைத்தவர்களை
அரணாய் பாதுகாக்கிறது
இளைத்தவனைப் பார்த்து கொழுத்தவன்
கொழுப்போடு கொக்கரிக்க முடிகிறது
சமூகத்தில் நடப்பதையெல்லாம் சாமானியனால்
ஏக்கத்தோடு மட்டுமே பார்க்க முடிகிறது
என்றாவது ஒரு நாள் ஏழைக்கும் விடியல்
கீழ்வானில் முளைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது
சத்தியம் மட்டுமே சத்தியமாய் நிலைக்கும்
என்பதை வரலாறு சாட்சியாய் சொல்கிறது
நேர்மை என்னும் அணையா விளக்கு மீண்டும்
மக்களின் நெஞ்சங்களில் சுடர் விடும் நன்னாளே
வாய்மையை வரவேற்கும் திருநாளாகும் ..
--த .சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment