Sunday, 29 March 2020

mazhalaikku vazhthu

மழலைக்கு  வாழ்த்து 

ஆலயத்தின்  மணியோசை  பிறந்த நாள் 
வாழ்த்தொலித்து  அடுத்தடுத்து  அடிக்கிறது 

பாடுகின்ற  பறவைகளும்  கூவுகின்ற  குயில்களும் 
உனக்காக  பூபாளம்  இசைக்கிறது 

அடுத்தடுத்து  அணிவகுத்து  வருகின்ற 
அலைகளெல்லாம்  தப்பாமல்  
உன்  பெயரை  எழுதி  தாளமடிக்கிறது 

காவிருக்கும்  பூக்களெல்லாம்  கணக்கின்றி  பூத்து
நின்று  உன்  கூந்தலுக்கு  தவமிருக்கிறது 

முகில்கிழித்து  வெளிவந்த  முழுமதியோ 
உன்  முகப்பொலிவில்  மயங்கி 
முத்த மழை பொழிகிறது 

வானத்து  விண்மீன்கள்  வரிசையிலே 
வந்துநின்று  உனை  வாழ்த்திச் செல்கிறது 

வீசுகின்ற  தென்றலும்  உன்  வாசல் வரை வந்து
வாஞ்சையோடு  உனை  வருடி  வாழ்த்துக்கள்  சொல்கிறது

கதிரவனும்  காலையிலே  கணக்காக  எழுந்து வந்து
கண்ணே  உனை  வாழ்த்துகிறது     

இயற்கையெல்லாம்  உனை  வாழ்த்தி விட  
தவழ  வைத்த  மண் பெருமை 
தரணியெங்கும்  எதிரொலிக்க  
அமுதமென்னும்  தமிழ் கொண்டு
அன்பே  உனை  வாழ்த்துகிறேன் 

வருங்காலம்  நமதென்று  புவியாள  
வந்தவளே  பறை சாற்று 

இனமான  உணர்வு  தமிழர் 
இல்லமெல்லாம்  - அவர் தம் 
உள்ளமெல்லாம்  வளர  
பேரிகையை  முழக்கு 

வாழ்க  வளமுடன் 
பல்லாண்டு  நலமுடன்      


                                                                               ----த . சத்தியமூர்த்தி 

Friday, 27 March 2020

Sontha oor

சொந்த  ஊர் 

நாகரிகத்தின்   நிழல்  கூட  நான்  
பிறந்த  ஊரில்  படவில்லை 
பழமையான  மனிதர்களின்  
புதுமையான  சிந்தனைகள்  


செடி  கொடிகள்  ஏராளம் - அதனால் 
செழுமைகளும்  தாராளம் 
வீசுகின்ற  காற்றைக் கூட 
 விரும்பி  நான்  நேசித்ததுண்டு 


தாளம்போட்டு  தாளம்போட்டு 
பயிரெல்லாம்  கூத்தாடும் 
வளர்ந்து  நின்ற  பயிரைக் கூட
 வாஞ்சையோடு  அணைத்ததுண்டு 


மடையில்  ஓடும்  நீரை  அள்ளி 
மகிழ்ச்சியோடு  சிரித்ததுண்டு 
பொங்கிவரும்  அருவி நீரை  ரசித்து 
பொழுதெல்லாம்  கழித்ததுண்டு 


தொங்குகின்ற  விழுதுப்பற்றி 
ஊஞ்சலாடி  மகிழ்ந்ததுண்டு 
மனம் போன  போக்குப்படி 
தனிமையிலே  திரிந்ததுண்டு 


கவலையின்றி  காலமெல்லாம் 
களிப்போடு  கழித்ததுண்டு
இனிமையிலே  மிதந்ததுண்டு 


மலையின்  மீது  நானும்  ஏறி 
முருகன்கோயில்  போனதுண்டு 
திருவிளக்கு  ஏற்றி வைத்து
மணியடித்து  மகிழ்ந்ததுண்டு 


ஆயிரம்  மைல்  கடந்தாலும் 
அன்பான  , அழகான  
என்  ஊருக்கு  இணையாக 
எந்த  நகரமும்  இல்லை  

                                                                                ----- த . சத்தியமூர்த்தி 


Thursday, 26 March 2020

koronaa

கொரோனா 

மனித  சமூகத்தை  அச்சுறுத்தும்  
கொடிய  வைரஸ்  கொரோனாவே 
நீ  வந்த வழியே  திரும்பி போ 


அச்சப்படாதே  மானிடா  
அடுத்தடுத்த  நாட்களில்
ஒன்று பட்ட  சமூகத்தின்  
ஒத்துழைப்பே  -இக்கொடிய 
வைரஸை  விரட்டியடிக்கும் 


தனித்தனிக் குடும்பங்கள்  தங்களை 
தனிமைப்படுத்துவது  ஒன்று தான்
இதை  பரவாமல்  தடுக்க 
உதவும்  


விரும்பியதை  செய்து  கொண்டு 
வீட்டிலே  இருங்கள் 
அவசியம்   என்றாலொழிய     
வெளியே  வராதீர்கள் 


அரசாங்கத்தோடு  இணைந்து 
அக்கறையோடு  செயல்படுங்கள்  
ஒன்றுபட்ட  சமூகம் தான் எந்த 
 சவாலையும்  வென்று  காட்டும் 


இரவு  பகலாய்  பணியாற்றும் 
மருத்துவம்  , சுகாதாரம்  , காவல்துறை 
பணியாளருக்கு  நன்றி  பாராட்டுவோம் 


குமரி முதல் இமயம்  வரை 
பரந்து  பட்ட  பாரத  தேசமே  
உறுதியாக  எதிர்த்து  நின்று 
இக்கொடிய  வைரஸை


வென்றதென்ற  வெற்றிசெய்தியை 
ஊது  சங்கே  
உரக்க  ஊது  சங்கே   
    
 
                                            ------ த . சத்தியமூர்த்தி 

Tuesday, 24 March 2020

suthanthiram

சுதந்திரம்  

அகிம்சை  வழியிலே  அகிலமே  
வியக்கும் வண்ணம்  
பாரதம்  பெற்றது 
பார்போற்றும்  சுதந்திரம் 


குமரிமுதல்  இமயம்வரை 
இந்தியரின்  இதயமெல்லாம் 
குதூகலித்து  கும்மாளமிட்டது 
சுதந்திரத்தில் தான் 


சுதந்திரக்காற்றை  சுவாசித்தபின் 
சுத்தமாய்  மாறிப்போனோம் 


சாதிமத  பிடியிலிருந்து  விடுபட
அறியாமை  என்னும் 
இருளிலிருந்து  விடுபட 
ஆதிக்க சக்திகளின்  கொடுமையிலிருந்து   
விடுபட 
இன்னுமொரு  சுதந்திர  வேள்வி 
துவக்குவோம்  
இம்முறை  ஏழை  பாழை  எல்லோருக்கும் 
சேர்த்தே  முழுமையான  
சுதந்திரம்  பெறுவோம் 


                                -----த  . சத்தியமூர்த்தி  
  

uzaipu

உழைப்பு 

அறியாமை  இருள் கிழிக்க
பகுத்தறிவு  சுடர்விட  
பழமைக்கு  விடைகொடு 
புதுமைக்கு  அழைப்பு விடு 

சிந்திக்கும்  திறனிங்கு 
சிறக்கட்டும்  
புவனமெல்லாம்  செழிப்புற 
புதுப்பாதை  அமையட்டும் 

செய்கின்ற  செயல்களிலே 
திறமையது  வெளிப்படட்டும் 
தரணியிலே  இன்பமது 
எல்லோர்க்கும்  கிடைக்கட்டும் 

உழைப்பதனால்  மட்டும்  தான் 
உயர  முடியும்  ஒருவனால்  இங்கு 
உட்கார்ந்து  கதைபேசி 
உவகையினை  இழக்க  வேண்டாம் 

கடுமையாக  உழைப்பதனால் 
கவலையெல்லாம்  பறந்தோடும் 
காசுபணம்  குறைந்தாலோ 
வருத்தம்  மீண்டும்  வட்டமிடும் 

இனிமையாக  பேசி பேசி  
இதயத்தை  தாலாட்டு 
வறுமை வந்து வாட்டும்  போதும் 
திறமை  உண்டு  மறவாதே 

உழைப்பதற்கு  உற்சாகமாக  புறப்படு 
வழி காட்ட தாயுண்டு 
வாழ்த்துரைக்க  மனைவியுண்டு 
அன்பு கொள்ள  சேயுண்டு
ஆண்டவனின்  அருளுண்டு 


                                                                                   ------த . சத்தியமூர்த்தி  

  

mana uruthi vendum

மன உறுதி  வேண்டும் 

பன்னீரில்  குளித்தாலும்  
கண்ணீரில்  தவித்தாலும் 
ஒன்றாக  பாவிக்கும் 
உள்ளமிங்கு  வேண்டும் 

விருந்துண்டு  மகிழ்ந்தாலும் 
பசியோடு  கிடந்தாலும் 
தாங்கிக்கொள்ளும்  பக்குவம்  தனை 
தனதாக்கிக்கொள்ள  வேண்டும் 

இன்பத்தில்  மிதந்தாலும்  
துன்பத்தில்  துடித்தாலும் 
இரண்டையும்  சமமாக  பாவிக்கும் 
இதயம்  வேண்டும் 

சொந்தங்கள்  சேர்ந்தாலும் 
தனியாகக் கிடந்தாலும் 
சோர்ந்திடாத  உள்ளம்  வேண்டும் 

விழுந்து  கிடப்பது  எழுந்து  கொள்ளவே 
முன்னிலும்  வேகமாய்  செயல்படவே 
இடைவிடாத  முயற்சியே  
வெற்றியடையும்  இலக்கு 

தளர்ந்திடாத  உள்ளமோ 
சரித்திரம்  படைக்கிறது 
உறுதியான  இதயமோ  
வெற்றிகளைக்  குவிக்கிறது


                          ------த. சத்தியமூர்த்தி  



   


Monday, 23 March 2020

natpu

  நட்பு 

இனிமையாக பொழுது போக்க
இரண்டுபேர்  கூடுவது நட்பல்ல 
துன்பம் வந்து  வாடுகின்ற  நேரத்தில் 
துணையாக  வந்துநின்று  வாஞ்சையோடு 
உதவி  செய்யும்  உள்ளந்தான்  உயர்ந்த  நட்பு 


இன்பம்  துன்பம்   எல்லாவற்றிலும்  
 உரிமையோடு  பங்குகொள்ளும் 
உயர்ந்த  உள்ளந்தான்  உண்மை  நட்பு 


ஊர்விட்டு  ஊர்   செல்லும்  நிலை  வந்தும் 
உள்ளத்தால்  பிரியாது 
 எண்ணத்தால்  நினைப்பதுதான்  சிறந்த நட்பு 


நண்பனின்  முன்னேற்றத்தில்  உண்மையான 
ஈடுபாட்டோடு 
உதவிகள்  செய்வதுவே  உத்தமமான  நட்பு 

கடல் கடந்து  பணிக்காக  நெடுந்தூரம்  சென்றாலும்  
கண்ணுக்குள்  நினைவுக்குள்  பக்கத்தில்  
நண்பனை  வைத்திருப்பதே  பாசமிகு  நட்பு 


இனங்கடந்து ,  மொழிகடந்து,  மதங்கடந்து  
இதயத்தின்  இணைப்பாலே  கிடைக்கின்ற 
நல்லுறவு  நலம்  நாடும்  இனிய  நட்பு 

தெரிந்தே  தவறு  செய்தது , நண்பன்  
என்றாலும்  மன்னிக்கும்  
மனப்பக்குவம்தான்  உண்மை  நட்பு 


ஆம் .. நட்பென்பது  கடவுள்  நமக்குத்தந்த 
நற்பரிசு   ..
இதயத்தை  தாலாட்டும்  இனிய  வரவு  
அரிய  உறவு  .. 


     -------த . சத்தியமூர்த்தி 

Vidiyarkalai

விடியற்காலை 

கடல்  குளித்து  மெல்ல மெல்ல  மேலெழுப்பி 
முகில்  கிழித்து  கதிர்  பரப்பும்  கதிரவனின் 
எழில்  அழகை  விழியிலே  பருகும்  நேரம் 
இளந்தென்றல்  மேனி  தொட்டு இளைப்பாறவைத்த  நேரம் 


அதிகாலை  பொழுதாகும்  அழகான  விடியலாகும்   
பறவையினம்  கூட்டாக  சிறகடித்த  வேலை  
பார்ப்பவர்  கண்ணுக்கு  விருந்தளிக்கும்  வேலை  


கடலோரம்  கரையோரம்  காலளந்த  போது 
 ஆசையுடன்  ஓடி  வந்து  அலை  தழுவும்  நேரம்  
அன்போடு  கையினிலே  நீரெடுத்துக்கொஞ்சம் 
அடுத்து  நின்ற  நண்பன்  மேல்  நானடித்த  போதும்  
அசையாதிருக்கும்   அவன்  விழியோ  கடலழகை  ரசிக்கும் 


பூத்து நிற்கும்  மலரெல்லாம்  எழில்  படைத்தக்கோலம்  
பறவைகளும்  தொடர்ந்திங்கு பூபாளம்  பாடும்  
கோவில்  மணி  ஓசை  மெல்ல  தென்றலிலே  மிதந்து  வரும்  
விடியற்காலை  சொர்க்கம்  இறைவன்  படைத்த  இனபம்  
ரசிக்கின்ற  கண்ணுக்கு  ரசனைகளும்  தோன்றும்  
அழகைப்  படைத்திட்ட  ஆண்டவனுக்கு  நன்றி  சொல்ல  வேண்டும் 


                -------- த.  சத்தியமூர்த்தி 


Thamizh vazhthu

தமிழ்  வாழ்த்து 

கன்னி  தமிழன்  பெருமையினை 
கவி  பாடி  சமைக்கின்றேன்
 
முத்தமிழின்  சுவை  தன்னை 
முடிந்த  மட்டும்  சொல்லப்பார்த்தேன்
 
செந்தமிழின்  ஏற்றத்தை 
செப்பி  விட  துடித்திட்டேன்
 
பைந்தமிழின்   புகழை  நான் 
படம்  பிடித்து  காட்டுகிறேன்
 
அழகு  தமிழ்  சொல்லெடுத்து  இக்கவியை 
அன்போடு  படைத்திட்டேன்
 
மூன்று  சங்கம்  கண்ட  தமிழ் 
மூவேந்தர்  வளர்த்த  தமிழ் 
உயிராகும்  இனிய  தமிழ் 
விழியாகும்  அழகு  தமிழ்
 
இணையற்ற  இலக்கணத்தை 
முறையோடு  சொன்ன  தமிழ் 
பாவேந்தர்  பலராலே 
பண்  செய்த  இன்ப  தமிழ்  வாழ்க !



                                                                                    ---த.சத்தியமூர்த்தி