Friday, 24 April 2020

master

September 5 teacher's day
MASTER

டாக்டர்    இராதாகிருஷ்ணன்  மட்டுமல்ல 
கல்விக்கண்  திறக்கும்  ஆசிரியர்கள்  அத்தனை பேரும் 
முதல்  குடிமகன்  மட்டுமல்ல  முக்கிய  குடிமகன்கள் 
ஏனென்றால்  வாத்தியார்கள்  நம்  வணக்கத்துகுரியவர்கள்  .

ஒழுக்கத்தைச்  சொல்லித்தந்து  சமூகத்தை  காக்கும் 
சரித்திரபுருஷர்கள் 

படிப்பவரின்  மனத்தினிலே  ஞானஒளி  ஏற்றுகின்ற 
 சூரிய தீபங்கள்  

சமூகத்தைப்  பாதுகாக்கும்  சக்திவாய்ந்த 
 படைக்கலன்கள். 

அறியாமை  இருள்  கிழித்து  அறிவொளியை  ஏற்றி  வைத்து   
புத்தம் புது  சமுதாயம் படைப்பதாலே  இவர்கள் 
  பிரம்மாக்கள் .

அரிச்சுவடியில்  ஆரம்பித்து  பேரறிவு  வரை  
வாரி வாரி வழங்குவதால்  கடை  எட்டாவது  
வள்ளல்கள்  .

படிப்படியாக  நாம்  உயர்வதற்கு  அடிப்படையாய்  அமைந்திட்ட
  காரணகர்த்தாக்கள் .

சத்தியத்தைச் சொல்லி தந்து  சமூகத்தை  பாதுகாக்கும்  சக்தி வாய்ந்த
  படைக்கலன்கள்  .

வித்தையினை  குறைவின்றி  கற்றுத்தரும் 
 வித்தகர்கள்  .

இவர்கள்  விரல்  அசைந்தால்  கோடுகள்  கூட  கோலங்களாகும் 
நல்ல  ஓவியங்களாகும் 

நா  அசைந்தால்  புரியாத  விஷயங்கள்  புரியவரும் 
தெரியாத  பாடத்தில்  தெளிவுவரும் 
   
தாய்  தந்தைக்கு  அடுத்து  மூன்றாமிடம்  குருவிற்கு 
கவிதையாலே  வாழ்த்திடுவோம்  கற்றுத்தந்த ஆசான்களை  


                                                                    ---த .சத்தியமூர்த்தி 

Monday, 20 April 2020

pothunalam

பொதுநலம் 

பிறந்தவன்  இங்கே  கொண்டு வந்தது  ஒன்றும்  இல்லேங்க 
பிறகு  எனது  உனதுன்னு  பிரிச்சது எல்லா  நடுவுல தானுங்க

ஆத்துல  இருக்கிற  தண்ணி  கூட  இங்கே பொதுவுல  இருக்குதுங்க 
அள்ளிக்குடிக்கிறவ  யாருன்னு  - அது எப்ப  கேட்டுதுங்க 

படைச்சவன்  உள்ளது  அத்தனையும் பொதுவுல  வச்சான் 
கிடைத்தவன்  தானே  தனக்குன்னு இங்கு  பேதம்  பிரிச்சான் 

மாடமாளிகை  கூடகோபுரம்  வானை  முட்டுது  அங்கே 
கிழிஞ்ச  ஓலைக்குள்  புகுந்த  நீராலே  குடிசைமிதக்குது  இங்கே 

ஆக்கி  வச்சதை  அடிக்கி  வச்சி  பார்த்து  ரசிக்குது  அங்கே 
அழுது  ஓஞ்ச  பிள்ளை  பசியைமறந்து  தூங்கும்  கொடுமைதான்  இங்கே

கட்டுகட்டாக  நோட்டை  தினம்  பூட்டி  கொழுத்துக்கிடக்குது  அங்கே 
கிடைச்ச  சில்லரையைக்  கூட்டி கூட்டி  ஏங்கி  தவிக்கிது  இங்கே 

மூட்டை  மூட்டையாய்  அரிசியைப்பதுக்கி பார்த்து  ரசிக்கிது  அங்கே  
பிடி சோறு கிடைக்காம  பசியிலே  ஏழை  கூட்டம்  தவிக்குது  இங்கே

செல்வ செழிப்பிலே  உருண்டு  திரண்டு  மேனி  மினுக்குது  அங்கே 
உடல்  கூட்ட  மீறியே  எலும்பு  வெளியிலே  எண்ணமுடியுது  இங்கே 

உலகமே  தன்  காலடியில்  என  கொக்கரிக்குது  அங்கே 
விடிஞ்சபொழுத  எப்படி  போகுமோன்னு  மருண்டு  முழிக்கிது  இங்கே  

தேவைக்கு  மேலே  சொத்து  சேர்ப்பதை  தடுத்து  நிறுத்தனும் 
தெய்வம்  தடுத்தாலும்  சட்டம்  எதிர்த்தாலும்  புரட்சி  வெடிக்கனும் 
சமதர்ம  சமுதாயம்  தோன்றும்வேளை  ஏற்றத் தாழ்வு  மறையும் 
மண்ணிலே  விளையும்  அத்தனையும்  சமமா  மக்களைச்  சேரும் 

                                                                                  -------------த. சத்தியமூர்த்தி 

     

  
  


kadhal oru kannamuchi

காதல்  ஒரு  கண்ணாமூச்சி 

எத்தனைப் பிறவிகள்  காத்திருந்தாய்  
இப்படி  என்னை  ஏமாற்றிட 
சொர்க்கத்தின்  விளிம்பு  வரை  கூட்டி வந்து
கொடிய  நரகத்தில்  தள்ளியதேன்

நீ  கண்ணுக்கு  மட்டும் இடவில்லை மையை 
உன்  சொல்லுக்கும்  சேர்த்தாய்  பொய்யை 
அரிய  பொக்கிஷம்  கிடைத்ததென்று
  ஆனந்தத்தில்  திளைத்திருந்தேன் 

நீயோ  எட்டாத  தொலைவில்  இருந்து கொண்டு  
  எனை  அழ வைத்தாய்  
என்  நிழல்  கூட  எனைப்பார்த்து  சிரிக்கிறது 
என்  நிழல்  கூட  எனக்கிங்கு  சுடுகிறது 

வசந்தம்  வந்தது  வாழ்வும்  வந்தது  என  
வண்ணக் கனவுகளில்  மிதந்திருந்தேன் 
பகற்கனவென்று  படைத்தவன் 
எனைப் பார்த்து  சிரிக்கின்றான் 

நான்  கொஞ்சம்  வாய்விட்டு  
சிரித்து விட்டால் போதும் 
அந்த  ஆண்டவனுக்குப் பொறுக்காது    
எனை  அழவைக்க  உடனே  யாரையாவது 
அனுப்பி வைப்பான் - அவன் கடைசியாக
அனுப்பி வைத்தது உன்னைத் தான் 
    
அழகு நிலவை   அண்ணாந்து  பார்த்தால்  போதும் 
மேகத்தைக் கூட்டி வந்து மறைத்து விடுவான்
   முல்லையை  தொட்டு  ரசித்தால்  போதும் 
முள்ளாலே  குத்தி  அவன்  ரசிப்பான் 

தென்றல்  வந்து  மேனியை  தழுவினால்  போதும் 
புயலாக  மாற்றும்  வரை  ஓய  மாட்டான் 
சோலையிது  என மகிழ்ந்தால்  போதும் 
பாலையாய்  மாற்றி  பரிகசிப்பான் 

மனைவி  வரப் போகின்றாள் என  
மகிழ்ந்திருந்தேன்  - அது  
மாயை   என்று  வழக்கம்  போல்  
வாழ்த்தி  விட்டான் 

எது  எப்படி  ஆனாலும் 
உன்னோடு  நான்  இணைவது  நிஜம்
இந்த முறை தோற்கப் போவது
அவன் தான்  - ஆம் 
அந்த  ஆண்டவன்  தான் 

                                                       ---------------- த .சத்தியமூர்த்தி   


   










Thursday, 16 April 2020

Thiyagam

தியாகம் 

மணம்  பரப்பும்  மலரெல்லாம் 
மாலை  சென்றால்  உதிர்ந்துவிடும் 
வாடுமுன்பு  வாசலெங்கும்  இனிய 
வாடைத்தந்து  விடைபெறும் 

உள்ளதெல்லாம்  அள்ளித்தரும் 
வள்ளலான  வாழைப்போல் 
தியாகம்  செய்யும்  எண்ணம்  வேண்டும் 
சேவை  செய்யும்  உள்ளம்  வேண்டும் 

எல்லாமும்  எனக்கே  வேண்டும்  என்று 
என்னுகின்ற  சுயநலத்தை  விட்டுத்தள்ளு 
பங்குபோட்டு  பிரித்துக்கொள்ளும் 
பரந்த மனமே  வந்து  சேரு 

வறுமை  நோயில்  வருத்தப்பட்டு 
வாசல்  தேடி  வருவோர்க்கு  
பழைய  சோற்றைக் கொடுத்தாவது
பசித்த வைற்றில்  பாலை  ஊற்று 

இல்லை  என்று  சொல்லி  நம்  இல்லம்  தேடி 
வருவோர்க்கு  உதவி  இல்லை  என்று  சொல்லாது 
இருப்பதிலே  கொஞ்சம்  பிரித்துக் கொடு

கடிந்துரைக்கும்  வார்த்தைகளை  மறந்துவிட்டு 
அன்போடு  ஆறுதலாய்  மொழி  பேச  கற்றுக் கொள் 
மெழுகு போல்  உருகுகின்ற  உள்ளம்  வேண்டும் 
பாறை  போல  உறைந்திருக்கும்  உள்ளம்  வேண்டாம் 

தன்னலமற்ற  மகாத்மாவின்  தியாக  வாழ்வினால் 
  தான்  தேசத்திற்கு விடுதலைக் கிடைத்தது
எல்லையில்  அணிவகுக்கும்  ராணுவ வீரர்களின்
உயிர்  தியாகத்தில் தான் 
தேசம்  பாதுகாப்பாய்  விழித்தெழுகிறது  

அன்னை  தெரேசாவின்  தியாகவாழ்வு  போல் 
அனைவரும்  வாழ  முயற்சிப்போம்

                                                                                         ----- த. சத்தியமூர்த்தி  
     

Tuesday, 14 April 2020

thodakkam

தொடக்கம் 

எடுக்கின்ற  செயல்கள் 
எல்லாமும்   வெற்றி பெற 
அறிவார்ந்த  சிந்தனையின்  தொடக்கம் தான்
சீர் மிகு  துவக்கமாகும் 

இடைவிடாத  முயற்சிக்கு 
இடையிடையே  பங்கம்  வந்தாலும் 
முடிவில்லாத  முயற்சி தான் 
  முன்னேற்றத்தின்  பாதையென்று  
உறுதியோடு  சொல்லுகின்ற  தொடக்கம் தான் 
உலகையாள  வழி வகுக்கும்  துவக்கமாகும் 

பாதைகளை  தினம்  மாற்றி 
பண்பு தனை  மறந்து மனம் 
போன படி வாழ்வதுவோ     
அழிவின்  தொடக்கமாகும்
அதுவே  மாற்றார்  வெறுக்கும்  துவக்கமாகும் 

உட்கார்ந்து  கதைபேசி 
காலத்தை வீணாக்காமல்
  உத்வேகத்தோடு  ஆரம்பிக்கும் 
உழைப்பின்  தொடக்கம் தான் 
இந்தியாவை  வல்லரசாக்கும் 
 இனிமையான  துவக்கமாகும் 

தொடக்கத்தின்  எழுச்சி தான் 
வெற்றியின்  யுக்தியாகும் 
அடியெடுத்து  வைத்தால் தான் 
நம்  இலக்கை  எட்ட முடியும் 

                 
                                                                           ------- த . சத்தியமூர்த்தி   



Wednesday, 8 April 2020

thunivu vendum

துணிவு  வேண்டும் 

கண்ணாலே  சிறை செய்த
பெண்  முன்னாலே ஊமையானேன்
பண்பாடும்  கவி  உள்ளம் 
பண்போடு  பழகும்   நாளும் 
உன்பால்  நான் கொண்ட அன்பு 
  நிழலாய்  தொடர்ந்து  உனை  வந்து  சேரும் 
அன்பாலே  அடிமை செய்த அழகே  !!
அன்றாடம்  அலங்கரித்த  சிலையே  !!

உள்ளமிங்கு  உனக்கு  என்று 
உரிமையோடு  எடுத்துச்சொல்ல  
சொல்லிவிடத் துடிக்கிறேன்
சொந்தம்கொள்ள  நினைக்கின்றேன் 

வரும்வரையில்  காத்திருந்து  
வந்த பின்னே  பேச்சிழந்து  
பார்வையாலே  தாக்குண்டு 
பாவையாலே  அடிப்பட்டு 
நாளெல்லாம்  துடிக்கின்றேன்

பேசாமல்  ஓர்  உறவு  தினந்தோறும் தொடர்கிறது
விழியாலே  விழுங்குகின்ற  விந்தை 
தினம்  நடக்கிறது  
வாயாடி  பட்டம்பெற்ற  வஞ்சியும்  தான் 
ஊமையான  விந்தையென்ன  

சிரிப்பொன்றை  அள்ளி  வீசி தினம்
சித்திரவதை  செய்வதென்ன 
துணிந்து  சொல்ல  நினைகின்றேன்   
துணைக்கு  தைரியத்தை  அழைக்கின்றேன் 

எடுத்துரைத்தால்  ஏற்றுக்கொள்வாள் 
என்னாலோ  முடியவில்லை 
நாணம்  வந்து  தடுப்பதாலோ 
நங்கையாலும்  முடியவில்லை 

எடுத்துரைக்கும்  துணிவு  வேண்டும் 
இல்லையெனில்  
காதலிலே  இறங்க வேண்டாம்      


                                                                     ---- த . சத்தியமூர்த்தி 

vetri padikattu

வெற்றி  படிக்கட்டு 

வாழக்கையெனும்  பாதையிலே 
வழியெல்லாம்  முட்புதர்கள் 

கடந்த பாதை  எங்கெங்கும் 
கறை படிந்த அனுபவங்கள் 

மனம்  சுமந்த  பாரங்கள் 
தொடர்ந்து வரும் சோகங்கள் 

காட்டாற்று  வெள்ளம்  போல் 
அடுத்தடுத்து  சோதனைகள் 

கட்டுக்குள்  அடங்காத  
கலைஞனின்  தாபங்கள் 

துரத்துகின்ற துரோகங்கள் 
தூது  விடும்  சாபங்கள் 

மனம் பட்ட காயங்கள் 
மயக்கத்தின்  பாவங்கள் 

கற்று தந்த  பாடங்கள்
கரை  சேர்க்கும்  மார்க்கங்கள் 

ஆறாத  தழும்புகள் தான்
அடையாள  முத்திரைகள் 

வெற்றியெனும்  தேவதையை 
தொட்டு விடும்  முன்பாக 
 பெற்று விடும்  பாடங்களே
இங்கு  
ஆறாத  தழும்புகளாம்   

                த . சத்தியமூர்த்தி  

Wednesday, 1 April 2020

amma

அம்மா 
  
பத்து மாதம் சுமத்து பெற்று 
மடிமீது  தவழவிட்டு     
அமுதூறும்  பால்தந்து 
ஆளாக்கி  வளர்த்துவிட்ட 
அன்பு தெய்வம்  தாய்க்கு  நிகர் 
அவனியிலே  ஏதுமில்லை  

பற்றி  விட்ட  நோய்  கண்டு 
பதறுகின்ற  தாய்மை போல்
பண்பு மிகு பாசம் போல்
பாரெங்கும் கண்டதில்லை 

தப்பு  செய்த  போதெல்லாம் 
தண்டிக்கும்  மனமின்றி  
அன்போடு  அரவணைக்கும்  
அம்மாவை  என்னென்பேன்

தாயின்  மடியில்  தவழ்ந்தபோது  
அவளே  எந்தன்  உலகம் 
இனி  உலகம்  முழுதும் தேடி நின்றாலும் 
என்  தாயைக் காண்பது கடினம்

ஆயிரம்  உறவுகள்  அவள் சொல்லிய  பின்னே  
எனக்கு  தெரிந்தது   இன்று 
அவளை மட்டும்  பிறந்தவுடனே 
தானாய்  தெரிந்தது  அன்று 

இறைவன்  தன்னை  இரத்த பந்தம் அதனால்
அதற்கு  அத்தனை  சொந்தம்
    
ஆயிரம் பிறவிகள்  நான்  எடுத்தாலும் 
 தாயாக  நீயே  மீண்டும்   மீண்டும்
வரவேண்டும்  
உன்  மடிமீது  சேயாய்  நானே 
தவழவேண்டும்   

                                                        ------ த .சத்தியமூர்த்தி