கன்னியின் ஏக்கம்
குழந்தையாய் இருந்தவள் குமரியாகி
தங்கச்சிலைப்போல் நிற்கிறாள்
மகளின் வளர்ச்சிக்கண்டு தாயின்
உள்ளம் பூரிப்படைகிறது
வளர்ந்துநிற்கும் பெண்ணைக்காணும் போதெல்லாம்
தந்தை உள்ளம் தவிக்கிறது
வயதுக்கு வந்து பல வருடங்கடந்தும்
மணவாழ்வு அமையவில்லை
இந்தக்கன்னி நெஞ்சிலே கணவன்
ஏக்கமோ முடிந்தபாடில்லை
தட்சணைக்கொடுக்க நகையில்லாமல்
நங்கை ஏங்குகின்றாள்
அழகிருந்தும் இளமை இருந்தும்
தனி மரமாய் தவிக்கின்றாள்
பொன்னையும் தந்து பெண்ணையும் தந்தால்
மாப்பிள்ளை சிரிக்கின்றார்
அதில் ஒன்றிரண்டு குறைந்தாலும்
எகிறிக் குதிக்கின்றார்
கன்னி சிந்துகின்ற கண்ணீரைப்பற்றி
கவலை யாருக்குமில்லை
உள்ளம் உடைவதை பெண்மை தவிப்பதை
பெரிதாய் நினைப்பதில்லை
பெண்ணே பெண்ணுக்கு பகையாவதை
திருமணச்சந்தையில் காணலாம்
தம் பிள்ளைக்கு பெண்ணைத் தேடும்போது
ஆயிரம் கேட்கும் மாமியாரே
ஒரு பெண்ணுக்கு தாயாய் இருப்பதை ஏனோ
மறந்து விடுகின்றாள்
பெண் வேலைக்குச் சென்று சம்பாதித்தாலும்
இந்த நிலைமை மாறவில்லை
சம்பளப் பணத்தோடு சகலமும்
கொட்டி அழுதால் தான்
மேளம் கொட்ட முடிகிறது
தாலி கழுத்தில் ஏறுகிறது
தட்சணை வாங்காமல் கன்னியை மணந்து
காப்பாற்ற மனமில்லை
காலங்கடந்தும் பெண்ணை விலை பேசும்
கொடுமை மாறவில்லை
--த .சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment