Saturday, 27 November 2021

Ninaivil Ninra Kathai-4

நினைவில்  நின்ற  கதை -4 

விடிந்த  பொழுதை  வரவேற்று 
கதிரவனைக்  கை  கூப்பி  வணங்கி  
பதிப்பகம்  நோக்கிப்  புறப்பட்டேன் 

வழியில்  வண்டியை  நிறுத்தி  கொஞ்சம்  
காலார  நடை  போட பூங்காவில்  நுழைந்தேன் 

பூத்துக்  குலுங்கிய  பூக்களெல்லாம்  எனை 
வரவேற்பது  போல்  தலையை  மெல்ல  அசைத்தது 

வீசுகின்ற  தென்றல்  வாஞ்சையோடு  எனை  
வருடிக்  கொடுத்து  புத்துணர்ச்சியாக்கியது 

சிறகடித்து  பறக்கும்  பட்டாம்பூச்சியின்  அழகு  என் 
சிந்தையைக்  கொள்ளைக்  கொண்டது 

எத்தனை  அழகோடு  அந்த  இறைவன்  
இந்த  பூமியைப்  படைத்திருக்கிறான் 

அவன்  படைப்பில்  மனம்  மகிழ்ந்திருந்த  வேளை,
எல்லா  அழகையும்  தோற்கடிப்பது  போல் 

வில்லேந்திய   விழிகளோடும், கலகலவென  சிரிப்போடும் ,
தோழிகள்  புடை  சூழ  கடற்கரையில்  கண்ட

அப்பேரழகி  
பூங்காவின்  அழகை  கூட்ட நந்தவனமாய்  நுழைந்தாள் !!

 பார்த்தவுடன்  எல்லோரையும்  வசீகரிக்கும்  பருவம் 
கனவினிலே  வந்து  மயங்க  வைத்த  உருவம்

காலையில்  தோன்றிய  மகிழ்ச்சிக்கானக்   காரணத்தை, 
அருகில்  செல்ல  அச்சப்பட்டு  இருந்த  இடத்திலிருந்தே ,
அவளைப்  பார்த்து  பார்த்து  பூரித்தப்போது
தான் புரிந்தது  

கனவில்  கண்டு  வந்த  என்  தேவதையை  
கண்முன்  கொண்டு  வந்து  நிறுத்திய  
கடவுளுக்கு  நன்றி  சொன்னேன்  

---த .சத்தியமூர்த்தி 

Saturday, 20 November 2021

Ninaivil Ninra Kathai-3

 நினைவில்  நின்ற  கதை -3

மழை நீரைச்  சேமிக்க  தடுப்பணைகள் எனது  ஊரில்  இல்லை. 
வானம்  பார்த்த  பூமியாக  நிலம்  வறண்டு  போனது.
 
ஊருக்கே  உணவளிக்கும்  விவசாயக்  குடியில் பிறந்த
நான் , வயிற்றுப்பிழைப்புக்காக  பட்டணம்  வந்த  போது  தான்,
கடற்கரையில்  அப்பேரழகியைக்  கண்டேன்  

பட்டணத்தின்  வனப்பு  பார்த்தவுடன்  பிரமிப்பை  ஏற்படுத்தியது

கல்லுரியில் படிக்கும்  காலம்  தொட்டு  கவிதையின்  மீது  
ஏற்பட்ட  காதல்  என்னை  கவிஞனாக  மாற்றி  இருந்தது .

நான்  கற்ற  தமிழ்  ஒரு  பதிப்பகத்தில்  சிறிய  வேலையில்  
குறைந்த வருவாயில்  எனைக்  கொண்டு  போய் சேர்த்தது, 

 மாதங்களில்  நான்  மார்கழியாக  இருக்கிறேன் 
கண்ணனின்  வாக்கு  கீதையிலே. 

அந்த மார்கழி  மாதத்து  பூபாளம்  பாடும்  
அழகிய  ஒரு  விடியற்காலை.

குதிரைகள்  பூட்டிய  தேரேறி,  அவனியெங்கும் 
ஒளி  வெள்ளத்தைப்  பாய்ச்சுவதற்காக ,

கதிரவன்  தன்  கடமையைக்  கச்சிதமாக  செய்வதற்கு
விரைந்து  வருகிறான்  வானில் .

இனி  இங்கு  இருக்க  இடமில்லையென
இருள்  விடை  பெற்றுச்  சென்றது  

பயிர்களை  வாழ வைத்து அதன்  மூலம்  
உயிர்களை  வாழ வைக்கும்  உத்தமனே  சூரியன்

என்  மனம்   என்றுமில்லாமல்  ஒரு வித மகிழ்ச்சியோடு 
  விடிந்த  பொழுதை  வரவேற்றது.

---த.சத்தியமூர்த்தி 
  

Saturday, 13 November 2021

Ninaivil Ninra Kathai-2

நினைவில்  நின்ற  கதை -2 

என்னை  முழுவதுமாக  நனைத்த  அலையை 
செல்லமாக  தட்டிக்கொடுத்து  திருப்பியனுப்பினேன்

கற்புள்ள  பெண்ணின்  சொல்லுக்கு  இயற்கை 
கை கட்டி சேவகம்  செய்யுமென்பதை ,

கண்ணகியின்  வரலாற்றில்  பூம்புகாரில்  கண்டோம் .

நிலவோடும் கடலோடும்  கொஞ்சி  விளையாடும் 
 இப்பெண்  கண்ணகியின்  வழித்தோன்றலோ!!

பல்வேறு  சிந்தனையிலிருந்து,  விடுபட்ட  நான் 
வானில்  மின்னல்  தோன்றி  மறைவதைப்   போல்

 அப்பெண்  கடற்கரையில்  காணாதது  கண்டு  திடுக்கிட்டேன்.
கரை  முழுதும்  தேடிய  பின்பும்  அவளைக்  காணவில்லை 

மத்தாப்பு  போல்  மனதில்  மகிழ்ச்சியைப்  பரப்பி
கொஞ்ச  நேரம்  எனை மயங்கச்செய்த  அப்பெண்ணின் 

சக்தியை  என்னென்பேன் !!

தனிமை  என்னை  சூழ்வதை  வெறுத்து  வேகமாக 
நடை  போட்டேன்  என்  இருப்பிடம்  நோக்கி 

வானம்  வரமாக  தரும்  மழையெனும்  கொடையை ,
பெய்த   பெருமழையின்  பெரும்பகுதியை ,

வீணாகக்  கடலில்  கலக்க  பார்த்து  நிற்கிறோம் !
 
காவிரியின்  குறுக்கே  கல்லணையைக்  கட்டி  
தஞ்சையை  நெற்களஞ்சியமாக்கினான்

"ஈடுஇணையற்ற மாமன்னன்  கரிகாலன்" 

வீட்டிற்கு  ஒருவர்  ஒன்று கூடி தங்கள்  ஊரில் 
உள்ள  கண்மாயை , குளத்தை ,ஏரியை 

நீர்நிலைகளை , தூர்  வாரினாளே ஏராளமான 
நீரைச்  சேமிக்கலாம் 

---த .சத்தியமூர்த்தி 




 
   












 

Saturday, 6 November 2021

Ninaivil Ninra Kathai-1

 நினைவில்  நின்ற  கதை -1

பௌர்ணமி  நிலவில்  கடற்கரையோரம்  நான் 
காலார  மெல்ல  நடந்தேன் 

பொன்னை  உருக்கி  விட்டது  போல்  கடல்  
தக  தகவென  காட்சி  அளித்தது 

நிலவின்  அழகில்  மயங்கி  நித்தம்  நித்தம் 
அலைகள்  எழுந்து  தழுவும்  முயற்சியோ !!

மணலில்  அமர்ந்து  மஞ்சள்  நிலவினை  
அண்ணாந்து  அதிசயமாய்ப்   பார்த்தேன் 

கனவில்  அடிக்கடி  கண்டு  வந்த  என் 
காதல்  நாயகியை  இதே  கடற்கரையில்  

இதுபோல்  ஒரு  பௌர்ணமி  நாளில்  தான் 
சந்தித்தேன் 

ஆயிரம்  நிலவின்  பிரகாசத்தோடு  
அவள்  எழில்  முகம் 

அவள்  அழகில்  வெட்கித்  தன்  தோல்வியை 
ஒத்துக்கொண்டு  மேகத்திற்குள்  

ஓடி  ஒளிந்தது  வானத்து  வெண்ணிலவு 

வெண்ணிலவு  மறைந்தாலும்,  அப்பெண்ணிலவின் 
பிரகாசத்தில்  கடற்கரை  ஜொலித்தது 

ஆயிரம்  ஆண்டுகள்  தவமிருந்து  அவளை
செதுக்கியிருப்பானோ  பிரம்மன் 

கண்ணாடி  வளையல்கள்  கல கலவென  ஓசையோடு , 
துள்ளி  குதித்து  மானைப்போல்  அங்குமிங்கும் 

மணல்  வெளியில்  கொலுசு  சத்தம்  எதிரொலிக்க ,
குழந்தைகளோடு   குழந்தையாய்  விளையாடினாள் 

அத்தனைக்  கூட்டத்திலும்  தேவதைப்  போல்  
பார்த்தவர்  கண்ணுக்கு  அமுதமாக  தோன்றினாள் 

வைத்த  கண்  வாங்காமல்  ஆசையோடு 
நான்  பார்த்ததாலோ  

ஆத்திரத்தில்  ஆவேசமாய் ஓடிவந்து  அடித்து
எழுப்பியது  என்னை   கடலலைகள் 

----தொடரும் ---

---த. சத்தியமூர்த்தி 

Thursday, 4 November 2021

Diwali

இல்லாமை இல்லாது போக

எல்லோரும் இன்புற்று வாழ

இன்பம் பொங்கும் திருவிழாவாக

மனதிற்கினிய மங்களம் பெருக

தீப ஒளி வீசும் தீபாவளி நன்னாள் 

மகிழ்ச்சி பொங்கும் திருநாளாகட்டும்

         -த.சத்தியமூர்த்தி