வாழ்க்கை -8
வாழ்க்கை ஒரு ரங்க ராட்டினம்
மேலும் கீழுமாக சுற்றி வரும்
வாழ்க்கை ஒரு சர்க்கஸ் கூடாரம்
காட்சி மாறிக்கொண்டே இருக்கும்
வாழ்க்கை ஒரு ஏணிப்படி
படிப்படியாய் தான் ஏற வேண்டும்
பால்ய வயதில் பள்ளியில் பாடம்
பருவ வயதில் காதலில் பாடம்
இள வயதில் குடும்பப் பாடம்
நடு வயதில் தனிமைப் பாடம்
வயோதிக வயதில் தத்துவப் பாடம்
மூச்சடங்கும் வேளை முழுமைப் பாடம்
வாழ்க்கை முழுதும் பாடம் புகட்டும்
வந்து போனவன் எல்லாம்
இங்கே வாழ்ந்தவனல்ல
வெற்றி பெற்றவனை மட்டும் குறித்துக் கொள்ளும்
அனுபவம் என்னும் அறிவைப் போதிக்கும்
ஆசான் வாழ்கை!!
ஆசையெனும் கடலில் தள்ளி
அவதிப் பட வைப்பதும் வாழ்க்கை !!
இருப்பதை கொண்டு மகிழ்வுடன் வாழ
சொல்லிக் கொடுப்பதும் வாழ்க்கை !!
இல்லாததற்கு ஆளாய் பறந்து
அவஸ்தைப் பட வைப்பதும் வாழ்க்கை !!
வாழும் போது எதைப்பற்றியும்
சிந்திக்காதது வாழ்க்கை !!
வாழ்ந்து முடித்ததும், " இன்னும் கொஞ்சம் நல்லவனாய்
வாழ்ந்திருக்கலாம்" என எண்ண வைப்பதும் வாழ்க்கை !!
வாழ்க்கை முழுதும் வான வேடிக்கையாய், ஆரவாரமாய்,
அமர்க்களமாய், ஆடம்பரமாய், வாழ்ந்தாலும்
கூட்டிக் கழித்து முடிவில் பார்த்தால்
"வெறுமை மட்டுமே தனிமையில் சூழும்"
கிடைக்கும் போதே அடுத்தவர்க்கு
கொஞ்சம் கொடுத்துவிடு.
""பின்னால் கொடுப்பதற்கு இருக்க மாட்டாய்""
நினைக்கும் போதே தானம் செய்து புண்ணியம் தேடு
வாழும் வாழ்க்கையின் ரகசியமே இதுதான்
---த.சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment