ஈழத்தின் இன்றைய நிலை
மீண்டும் மீண்டும் ஈழம் பற்றிப் பேச
என்ன இருக்கிறது ?
ஈழம் முடிந்து போன கதையென்று
சிங்களம் கொக்கரிக்கிறது.
சொந்த நாட்டு மக்களையே ரசாயன குண்டு போட்டு
கொன்றக் கொடுமை ஈழத்தில் நடந்தது
ஏதோ இலங்கையில் என்றோ நடந்தது
என எண்ண வேண்டாம் .
இலங்கையைத் தொடர்ந்து இக்கொடுமை
எங்கு வேண்டுமானாலும் நாளை ஏற்படலாம்
இன்னுமும் ஐ .நாவில் வெட்கமில்லாமல் இலங்கையை
மனசாட்சியற்ற நாடுகள் பாதுகாக்கிறது
தமிழ் மண்ணில் சிங்கள குடியேற்றம்
வெற்றிகரமாய் தொடர்கிறது
நிலத்தை , வீட்டை ,தொழிலை ,உடைமையை
எல்லாம் இழந்து, நடைபிணமாய் தமிழினம்
பயத்தில் , பதட்டத்தில் , நிம்மதியற்று
கேட்பாரற்றுக் கிடக்கிறது.
பக்கத்திலே இருந்தும் , பரிதாபப்படும் நிலையில் தான்
தமிழகம் தலை குனிந்து நிற்கிறது .
தமிழத்தில் உதித்த சூரியன் போல்
தமிழீழத்திலும் ஒருநாள் விடியல் உதிக்கும்
கொல்லப்பட்ட எம் தமிழ்மக்கள் விதையாய் விழுந்து
விருட்சமாய் வளர்ந்து வீரியத்தோடு வருவார்கள்
இலங்கையை ஆண்ட தமிழ் வேந்தன் இராவணனை போல் ,
தமிழீழம் ஆளும் எழுச்சி மிகு தலைவனைக்
காண காலத்தோடு சேர்ந்து
நாமும் காத்திருப்போம்
----த .சத்தியமூர்த்தி