Sunday, 31 July 2022

Petrorgalin Kavanathirku

 பெற்றோர்களின்  கவனத்திற்கு 

தாலாட்டி , சீராட்டி , கண்போல்  வளர்த்த பிள்ளைகளைப்  
பள்ளியில்  சேர்க்கும்  போது  பெற்றோர்கள் அதிக 
கவனம்  செலுத்த வேண்டும்

கார்ப்பரேட்  பள்ளிகளின் அட்டூழியங்களுக்கு எப்படியாவது 
 அந்தப்  பள்ளியில்  தங்கள்   பிள்ளைகளைச் சேர்க்க  வேண்டும் 
என்ற  பெற்றோர்களின்  முனைப்பும்   ஒரு காரணமாகும் 

 அருகில்  இருக்கும் பள்ளியைத்   தவிர்த்துவிட்டு  பெண் பிள்ளைகளைக் 
கல்விக்காக  வெகுதூரம்  அனுப்புவதைத்  தவிர்க்க  வேண்டும் 

பணம்  ஆதிக்கம்  செலுத்தும்  ஒரு  சமூகத்தில்  நம்  பிள்ளையைப் 
பாதுகாப்பான  பள்ளியில்  சேர்ப்பது  நமது  பொறுப்பும்  கடமையுமாகும் 

எளியோரைத்  தாழ்த்தி ,வலியோரை  வாழ்த்தும்  வழக்கமான 
சமூகத்தில்   குற்றப்  பின்னணியுடைய  பள்ளியில்  தொடர்ந்து  நம் 
குழந்தைகளைச்  சேர்ப்பது  எத்தனை  கொடுமையானது ?

காலப்  போக்கில்  எதையும்  மறப்பதால்   இது போன்ற
தவறுகள் தொடர்கதையாகிறது   
 
காலம்  எப்போதும்  கயவர்களுக்கு  துணை  போகாது
 
மக்களின் எழுச்சிக்கு  முன்பாக   எந்த  கூட்டமைப்பும் 
எந்த  பள்ளியையும்  காப்பாற்ற  முடியாது  

தர்மதேவதையின்   கண்கள் கட்டப்பட்டிருந்தாலும்  
நீதிதேவனின்  தண்டனையிலிருந்து  தப்ப  முடியாது 

பெற்றோர்கள்  தங்கள்  பிள்ளைகளிடம்  மனம்  விட்டு  
நண்பர்கள்  போல்  பழக  வேண்டும்

மதிப்பெண்களுக்குத்   தரும்  மதிப்பை விட  
மகளின் பாதுகாப்பில்  தனி  கவனம்  செலுத்துங்கள் 

 அரசுப்  பள்ளியில்  படித்த  ஐயா அப்துல்கலாம்  அவர்கள்  
விஞ்ஞானியாகி , குடியரசுத்   தலைவரானார் 

விழிப்புணர்வோடு  செயல்படுங்கள் 
பொறுப்புணர்ந்து  பிள்ளைகளைப்  பாதுகாத்துக்  கொள்ளுங்கள் .

---த .சத்தியமூர்த்தி  

Sunday, 24 July 2022

Pen Sirargalin Kavanathirku

  பெண்  சிறார்களின்  கவனத்திற்கு 

கல்விக்கண்  திறந்த  கர்மவீரர்  காமராசர்
சிற்றூர் , பேரூர் , நகரம்  என  எல்லா  இடங்களிலும் 

 மதிய உணவு  திட்டத்துடன்  அரசுப்   பள்ளிகளை 
ஆரம்பித்து  கல்வியில்  புரட்சி  செய்தார் 

அதன்  பயனாய்  தமிழகம்  முன்பை விட 
அதிவேகமாக  கல்வி  பயில ஆரம்பித்தது 

காலப்போக்கில்  எல்லாமும்  தனியார்  வசமாக கல்வியிலும் 
 வணிக  நோக்கோடு  தனியார்  பள்ளிகள்  முளைத்தது    
   
அரசுப்  பள்ளியைக்  காட்டிலும்  கட்டிடத்தில் , ஆடம்பரத்தில் 
வசதி  வாய்ப்பில்  பிரமண்டத்தைக்  காட்டி  மக்களை  ஈர்த்து 

தனியார்  பள்ளிகள்  கட்டணக்  கொள்ளையில்  ஈடுபட்டு  
கார்ப்பரேட்  முதலாளிகளாக தங்களை  வளர்த்துக்கொண்டார்கள் 

படிக்கின்ற  மாணவ  , மாணவியரின்  பாதுகாப்பில்  
அக்கறை  செலுத்த ஆர்வம்  காட்டுவதில்லை 

பள்ளி  வளாகத்தில் மரணங்கள் , அடுத்தடுத்து  நிகழ்ந்தாலும் 
தங்கள்  வசம்  உள்ள  பணத்தால்,  அதிகாரவர்க்கத்தை 
சரிக்கட்டி  தங்களைப்  பாதுகாத்துக்  கொள்கிறார்கள் 

பெண்  பிள்ளைகள்  பள்ளியை  விட்டு  வந்ததும் , தங்கள்  
தாயாரிடம் பள்ளியில்  நடந்த அத்தனையையும்
  பகிர்ந்து  கொள்ளவேண்டும்  

அச்சுறுத்தலோ , அசம்பாவிதமோ , மிரட்டலோ , 
பாலியல்  தொல்லைகளோ,  எதுவென்றாலும்  
 தயங்காமல் தங்கள்  தாயாரிடம்  வெளிப்படுத்தவேண்டும்

விடுதியில்  தங்கிப்  படிக்கும் மாணவிகள்  தங்கள்
பாதுகாப்பைப்   பெற்றோர்  மூலம் 
  உறுதி செய்துக் கொள்ளவேண்டும்

பள்ளிக்  கல்வித்துறை  தனியார்   பள்ளிகளை , விடுதிகளை 
ஆய்வுசெய்து , மாணவிகளின்  பாதுகாப்பைக்  
கண்காணிக்கவேண்டும் 

 எத்தனை  வேளை   இருந்தாலும் , பள்ளி  ஆசிரியரிடம்  சென்று 
பெற்றோர்  தங்கள்  பிள்ளைகளின்  நிலையை  
அறிந்துகொள்ளவேண்டும் 

மாணவச்  செல்வங்களே ! வருங்கால   தூண்களே !
 உங்கள்  பின்னால்  தமிழகமே  உள்ளது  என்பதை  
இனியாவது  புரிந்துகொள்ளுங்கள் 

----த .சத்தியமூர்த்தி 

Sunday, 10 July 2022

Ezhuthukol

 எழுதுகோல் 

வரலாற்றைப்  பதிவு  செய்து  அடுத்த  தலைமுறைக்கு  
நகர்த்திடும்  நெம்புகோலே  எழுதுகோல்  

எண்ணத்தின்  வெளிப்பாட்டை  எழுத்து  வடியில்  
படிக்கச்  செய்யும் எந்திரமே  எழுதுகோல்

ஆட்சிகளின்  அவலங்களை  அம்பலப்படுத்தி  ஆட்டங்காண  
வைக்கும்  வெடிமருந்தே  எழுதுகோல் 

காவியங்கள்  பல  பிறக்கக்   காரணமாய்  
அமைவது  ஏற்றமிகு  எழுதுகோல் 

 சிந்தனையின் கதவு  மெல்ல  சிறகடித்து  பறக்கும்போது 
கண்டதையெல்லாம்  பதிவு  செய்யும்  காலச்சக்கரம்  எழுதுகோல் 

எங்கோ  ஒரு  மூலையில்  நடக்கும் நிகழ்வுகளை  எல்லா 
இடத்திற்கும்  வெளிச்சம்  போட்டுக்  காட்டும்
  காலக்கண்ணாடி எழுதுகோல்

கல்வியறிவில்லாத  சமூகத்தையும்   கைப்பிடித்து மெல்ல , 
மெல்ல  கற்றுத்தந்து , தன்னம்பிக்கை  ஊட்டும்  
நிலைக்கண்ணாடி  எழுதுகோல் 

 படித்தவனைப்  பாராட்டும்  பண்புள்ள  சமூகத்தில்  
பாமரனையும்  படிக்கவைக்கும்  கருவியே  எழுதுகோல் 

ஆயுதத்தால்  சாதிக்க  முடியாததையெல்லாம்  
அழுத்தமான  வார்த்தையாலே  வென்றுகாட்டும்
வலிமையான  ஆயுதமே  எழுதுகோல் 

மக்களையெல்லாம்  ஒன்று  திரட்டி , 
மண்ணைக் காக்கும்  மகத்துவம்  எழுதுகோல் 

எம்  எழுதுகோல்  வாய்மையைப்  போதிக்கும் 
எம்  எழுதுகோல்  நேர்மையை  நேசிக்கும் 

எம்  எழுதுகோல்  உண்மையை  உலகுக்கு  உரக்க  
எடுத்துச்சொல்லும் 

எம்  எழுதுகோல்  தமிழருக்காக , தமிழுக்காக  
காலமெல்லாம்  போராடும்  

---த .சத்தியமூர்த்தி 

Sunday, 3 July 2022

Adambara Thirumanangal

 ஆடம்பரத்  திருமணங்கள் 

ஒரு  இரவில்  படோடாபம்  காட்ட  பல  
இலட்சங்கள் வாரி  இறைத்து  திருமணம்  
செய்ய யாரிட்டது  கட்டளை ?

பக்கத்தில்  இருப்பவனைப்  பார்க்கக்கூட  மனமில்லாத  
மனம்  படைத்தோர்  கல்யாணத்தில்  மட்டும்  
கவலையில்லாமல்   செலவு செய்வது  யாருக்காக ?

சாப்பிட  ஆரம்பிக்கும் போது இலையில்  வைக்க 
ஆரம்பித்தவர்கள்  சாப்பிட்டு  முடியும்  போதும்  யாருக்காக  வகைவகையாய்  வைத்துக்கொண்டே  போகிறார்கள் 

 பாதிக்கும்  மேலாக  இலையுடன்  குப்பைக்கு  
போகும்   உணவு வகைகளை  பசியோடு  இருக்கும்  
 பாமரனுக்கு  பகிர மனம்  உண்டா  ?

  சிக்கனமாய்  செய்யுங்கள் என  சொல்ல  வரவில்லை 
தேவைக்கு  மேலே  வீண்  செலவு  எதற்காக ?

படிப்புக்காக , மருத்துவத்திற்காக , சமூகநலத்திற்காக  ,
இன்னும்  அரசாங்கத்திடம்  உதவி  கேட்கும்   நிலையில் 
மக்கள்  உள்ளார்கள் 

திருமனச்  செலவில்  ஒரு   பகுதியை  இதுபோல 
நல்ல  காரியத்திற்கு  மடை  மாற்றம்  செய்தால்  
மணமக்கள்  வாழ்வு  சிறக்குமல்லவா !

 வசதிப்  படைத்தோர்  சிந்திப்பீர் ! 
ஆடம்பரத்  திருமணத்தைத்  தவிர்ப்பீர் ! 

கல்யாணம்  என்பது  இரு  மனங்களின்  
சங்கமம்  தான்  

அதற்காக   கட்சிக்   கட்டிக்கொண்டு 
 காசை வாரி  இறைக்காதீர்! 

செல்வம்  அதிகமாய்   ஆண்டவன்  கொடுத்தது 
இல்லாத  ஏழைக்கும் சேர்த்துத்தான் 

வாழ்க! மணமக்கள் பல்லாண்டு!
 வளமோடும் , நலமோடும்  நூறாண்டு !

த .சத்தியமூர்த்தி