Sunday, 26 June 2022

Mana Amaithi

மன அமைதி  
 
ஆசையெனும்  மாயையில்  சிக்கி  
அவதியுறும்போது   நமக்கு  தேவை  மன  அமைதி 

ஓடி  ஓடி  சளித்தப்பின்  நமக்கு  
புத்துணர்ச்சி  தருவது  மன அமைதி 

எண்ண  அலைகள்  எண்ணிக்கையில்  அடங்காமல் 
அடுத்தடுத்து  தொல்லைத்  தரும்போது  தேவை  மன  அமைதி

குடும்ப  பாரம்  நம்மை  அழுத்தும்போது 
குதூகலத்துடன்  சமாளிக்க  உதவுவது  மன  அமைதி

காலை  எழுந்தவுடன்  கண்மூடி  தியானத்தால்  வரும் 
அமைதி  அந்த  நாள்  முழுவதும்  செயல்பட உதவும் 

பரபரப்பாய்  இயங்கும்  அவசர  உலகில்  
பாதுகாப்பாய் இருக்க  உதவும்  மன  அமைதி

கோடி  பணம்  கிடைத்தாலும்  கிட்டாத  சுகமே 
கொஞ்சநேரம்  கிடைக்கும் மன  அமைதி

கண்டதையும்  நினைத்து  சதா  கவலைப்படும் 
மனதிற்கு  கட்டாயம்  தேவை சலனமற்ற  அமைதி

ஆலையம்  சென்று  ஆண்டவனைத்   தரிசிப்பதால்
அனந்தமுடன்  கிடைக்கும்  மன  அமைதி

சித்தர்  சமாதியில்  தியானம் செய்ய  
கிடைத்திடும்  நிர்மூலமான  அமைதி

இருப்பதில்  கொஞ்சம்  பகிர்ந்து  கொடுக்க 
இல்லாதவன்  சிரிப்பிலே  தோன்றும்  அமைதி

ஒற்றுமையுடன்  சமூகம்  சேர்ந்து  வாழ  முற்பட்டால்  
நாடு  முழுவதும்  தோன்றும்  நல்லதோர்  மன  அமைதி

----த .சத்தியமூர்த்தி 

Sunday, 19 June 2022

Engum Thamizh Ethilum Thamizh

 எங்கும்  தமிழ்  எதிலும்  தமிழ் 

கற்கண்டு  சொற்கொண்டு  கவிதை  நடையில்  
காவியம்  பல  செய்து  தமிழுக்கு  பெருமை  
சேர்த்தது  ஒரு  காலம் 

எல்லா  பாடத்திலும்  முதன்மையாய்  தேர்ச்சி  
ஏனோ  எம்  தமிழில்  மட்டும்  குறைவாய்  பயிற்சி 

தமிழ் மட்டும்  அவனுக்கு/அவளுக்கு  சரியாய்  வராது 
தமிழ்  பெற்றோர்  பெருமையாய்  சொல்லிக்  கொள்வது  

பத்திரிகையைப்  படித்துத் தான்  தமிழைக்  கற்றுக்கொண்டேன் 
அப்படியானால்  பள்ளியில்  படிக்கும்போது  என்ன  செய்தீர்கள் ?

ஒரு  மொழி  அழிந்தால்  , அவன்  இனம்  அழியும்  
இனம்  அழிந்தால்  , அவன் வாழ்ந்த  நிலம்  அழியும் 

நிலமற்று  நாடோடியாய்  இன்று  திரிபவர்கள் அன்று 
தங்கள்  தாய்  மொழியை  கற்க  மறந்தவர்கள் 

தமிழ்க்குடிகள்  முறையாய்  தமிழைக்  கற்கவில்லையென்றால் 
வேறு  யார்  இம்  மொழியைக்  காப்பது ?

பள்ளியில்  தனிக்  கவனம்  செலுத்தி  தமிழை  
முறையாய்  கற்றுத்  தரவேண்டும்

மாணவர்  மன்றம், புலவர்  மன்றம்  போல்  தமிழுக்கு 
 தேர்வு  நடத்தி  சான்றிதழுடன்  பரிசுகள்  தரவேண்டும்

தமிழ்  மொழியின்   வளர்ச்சிக்கு அரசாங்கம்  
அக்கறையோடு  பாடுபடவேண்டும்  

தமிழ்  வழியில்  பயின்றவர்க்கு  அரசு  வேலையில்
முன்னுரிமைத்  தரவேண்டும் 

விழிக்கு  இணையான  எம்  மொழியை  
தமிழை  வணங்கி வாழ்த்துவோம் 

----த .சத்தியமூர்த்தி  

Sunday, 12 June 2022

Thane Thanaku Ellam

தானே  தனக்கு  எல்லாம்  

உன்னையே  நீ  அறிவாய்
                                            -- தத்துவமேதை   சாக்ரடீஸ் 

தன்னைத் தானே  உணர  தனக்கொரு  கேடில்லை 
தன்னைத் தானே  வெல்ல  தனக்கொரு பகையில்லை 

தன்னைத் தானே  செதுக்க  தனக்கொரு இணையில்லை 
தன்னைத் தானே நம்ப  தனக்கொரு வீழ்ச்சியில்லை  

தன்னைத் தானே தேற்ற  தனக்கொரு குறையில்லை      
தன்னைத் தானே அளக்க  தனக்கொரு கருவியில்லை 

தன்னைத் தானே உயர்த்த  தனக்கொரு  தடைகளில்லை 
தன்னைத் தானே காக்க  தனக்கொரு  தயக்கமில்லை 

தன்னைத் தானே வழி நடத்த  தனக்கொரு  தலைமை  தேவையில்லை 
தன்னைத் தானே திருத்திக்கொள்ள  தனக்கொரு அறிவுரைத்  தேவையில்லை 

சிலர்  தானே  தனக்கு  சுமையாவான்
சிலர்  தானே  தனக்கு  சுகமாவான் 

சிலர்  தானே  தனக்கு  பகையாவான் 
சிலர்  தானே  தனக்கு  உறவாவான் 

சிலர்  தானே  தனக்கு  விதையாவான் 
சிலர்  தானே  தனக்கு  உரமாவான் 

சிலர்  தானே  தனக்கு  பலமாவான் 
சிலர்  தானே  தனக்கு  வினையாவான் 

சிலர்  தானே  தனக்கு  எமனாவான் 
சிலர்  தானே  தனக்கு  சிவனாவான் 

தன்னை  உணர்ந்து  ஜெகத்தினை  வெல்வோம் 
தன்னை  இணைத்து  தரணியை  வெல்வோம் 

---த .சத்தியமூர்த்தி  

Sunday, 5 June 2022

Kadarkarai Sollum Seithi

 கடற்கரை சொல்லும் செய்தி  

காசு  குறைவாக  இருந்தாலும்  பொழுது  போக்க  
தைரியமாய்  செல்லுமிடம்  கடற்கரை 

அனல்   பறக்கும் கோடையைச்   சமாளிக்க
 சாமானியர்கள் கூடுமிடம்   கடற்கரை 

நீண்ட  நெடிய   கடற்கரையைத்  தன்னகத்தேக் 
 கொண்டது  சென்னைப்  பட்டணம் 

வேர்த்து , வியர்த்து ,  வரும் மக்களின்  மேல் 
குளிர்ந்தக்  காற்றை  வீசி  ஆசுவாசப்படுத்தவது   கடற்கரை 

தேங்காய் , மாங்காய் ,பட்டாணி , சுண்டல் ,காலங்காலமாய் 
கடற்கலையில்  விற்கும்  நொறுக்குத்தீனி  

 கடற்கரையின்  அழகே  இடைவிடாது  கரையை  
முத்தமிட்டுக்  கொண்டிருக்கும்  கடல்  அலைகள் தான் 

மணலிலே  ஓவியம்  வரைந்து   அதை  அலைகள்  வந்து  
 கலைத்திடாமல்  இருக்க  குழந்தைகள்  படும்பாடு  குதூகலமானது 

  சோர்ந்து  கிடந்த  மனதையும் , உடலையும் , சுறுசுறுப்பாக்கி  
மகிழ்ச்சியோடு  திருப்பியனுப்பும்  மாமருந்து   கடற்கரை 

திருமண  தம்பதிகளும் , இனிய  காதலர்களும் 
உறவை  வளர்த்துக்கொள்ள  உதவும்   கடற்கரை 

கைகோர்த்து,  பாதுகாப்பாய்  வரிசையில்  நின்று  
ஆக்ரோஷமாய்  வரும்  அலையையே  ஆவலாய்  எதிர்பார்த்து  

ஓங்கியடித்து  நம்  உடையை  நனைத்ததும்  சந்தோஷத்தில்  
துள்ளிகுதிப்பதும் , கூச்சலிடுவதும் , கடற்கரையில்  நிகழும்  அற்புதம் 

இத்தனை  பெருமைமிகு   கடற்கரையில்  இன்று  வடநாட்டு  
மக்கள் தான்  கூட்டம்  கூட்டமாய்  கூடுகிறார்கள் 

எங்கே  போனார்கள்  நம்   தமிழ்  குடிகள் ?
 கடற்கரைக்கு  வருவதற்கும்  முடியாமலா  போனார்கள் !

சென்னையை  விட்டு  வெகுதூரம்  புறநகர்  நோக்கி 
 தமிழர்கள் நகர்ந்துக்  கொண்டிருக்கிறார்கள் 

தம்  சொந்த   மண்ணிலே  ஒவ்வொரு  அடையாளத்தையும் 
தொலைத்துக்  கொண்டு  இருக்கிறார்கள் 

 கடற்கரை  சொல்லும்  செய்தி  இதுதான் 

த .சத்தியமூர்த்தி