Saturday, 29 January 2022

Kaval Dheivangal

 காவல்  தெய்வங்கள் 

மலை  முகட்டின்  விளிம்பிலிருந்து 
மஞ்சள்  நிலவு  புறப்பட்டது  

கடல்  அலையில்  ஆசை  தீரக்  குளித்து, 
மெல்ல  மெல்ல  மேலெழும்பியது  வெண்ணிலவு  

பௌர்ணமியில்  ஒளி  வெள்ளம்  அவனியெங்கும் 
பாய்ச்சி  பொன்னிறமாய்  மின்னியது  தங்கநிலவு 

தேய்பிறையாய்  தேய்ந்தாலும் , மீண்டும்  வளர்பிறையாய் 
வாழ்வு  வரும்  எனும் தத்துவத்தைச்  சொல்கிறது  வானிலவு 

பெண்ணின்  அழகிய  முகத்தோடு  தன்னை  ஒப்பிட்டதாலோ,
வெட்கப்பட்டு  மேகத்திற்குள்  ஓடி  ஒளிந்தது  பெண்ணிலவு 

மயக்குகின்ற  மாலைப்பொழுது   வந்தவுடன்  
மகிழ்ச்சியுடன்  உலா  வந்தது  காதல்  நிலவு 

கதிரவனின்  ஒளியைக்  கடன்  வாங்கி,  
இரவு  முழுதும்  ஆட்சி  செய்யும்  பொன்னிலவு 
பொழுது  புலர்ந்ததும்  விடை  பெறுகிறது 

இடை  விடாமல்  கண்ணைச்  சிமிட்டிக்கொண்டே  
நம்மை  கண்காணிக்கிறது   நட்சத்திரங்கள்

ஒரு  சிறிய  குமிழ்  விளக்கு  எரிவதற்கும்  நாம் 
பணம்  கட்ட  வேண்டும் -- ஆனால் 

இயற்க்கைக்   கருணையோடு  நமக்குத் தந்த 
கொடையை  நன்றியோடு  நினைத்துப்  பார்ப்போம் 

கதிரவனும் , வெண்ணிலவும் , சமூகத்தைக்  காக்கின்ற 
கலங்கரை  விளக்கமாக , காவல்  தெய்வங்களாக ,

நம்மிடம்  கூலி  வாங்காமலே  நமக்கு  
உண்மையாக  தொண்டு  செய்கிறது  

---த .சத்தியமூர்த்தி      

Saturday, 15 January 2022

Pongal

பொங்கல்  

தமிழர்  தம்  திருநாளாம் 
தைப்  பொங்கல்  நன்னாளில் 

ஜாதி, மத ,பேதங்கடந்து 
ஜனங்களெல்லாம்  ஒன்று  சேர்ந்து,

அம்மன்  கோவில்  வாசலிலே  
படையலுடன்  பொங்கலிடு !!

பள்ளி  சென்று  பயிலாதவர்க்கும் 
சமத்துவம்  , சகோதரத்துவம் , சகிப்புத்தன்மையைப்  

பாங்குடன்  கற்றுத்தரும் 
பள்ளி  வாசல்  முன்னாலே  
பொதுவுடைமைப்  பொங்கலிடு !!

உன்னை  நீ  நேசிப்பது  போல ,
பிறரையும்  நேசிக்கக்  கற்றுத்தரும்

தேவாலயம்  முன்னாலே,
 தேனோடு  பால்  கலந்து ,
தெவிட்டாதப்   பொங்கலிடு !!

தமிழர்  திருநாளை  தரணியெங்கும் 
மகிழ்ச்சியோடு  கொண்டாடு !! 

கருப்புச்சட்டங்களை  விவாதமின்றி  நிறைவேற்றி ,
கடந்த  ஓராண்டு  விவசாயிகள்  பட்ட  பாடு  
பெரும்பாடு !! 

உழவர்  திருநாளில்  விவசாயிகளின்  நலன்காக்க 
விழிப்புணர்வோடு  ஒன்றுபட்டு  செயல்படுவோம் 

சகலத்தையும்  அனைவர்க்கும்  பகிர்ந்து  கொடுத்து ,
ஆனந்தம்  பொங்கிடவே   அகிலமுழுவதும்  
பொங்கலிடு !!    இனி 

தமிழர் தம்  வாழ்வில்  
எந்நாளும்  திருநாளாய்  மலர்ந்திடவே,

ஏற்றமிகு  பொன்னான  வாழ்வு  கிடைத்திடவே ,
தேனினும்  இனிய  தமிழாலே  

பொங்கல்  நல்  வாழ்த்துக்கள் கூறும்  அன்பன்  

----த .சத்தியமூர்த்தி   

Saturday, 8 January 2022

Valimai

வலிமை  

உளியின்  வலிமை  சிலையைச்  செதுக்கும் 
கலப்பையின்    வலிமை  விளைச்சலைப்  பெருக்கும் 

நாவின்  வலிமை  புரட்சிக்கு  வித்திடும் 
பேனாவின்  வலிமை ஆட்சி  மாற்றத்திற்கு  அடிகோலிடும் 

காலத்தின்  வலிமை வளர்ச்சியைக்  காட்டும் 
கவிதையின்  வலிமை முக்காலத்தையும்  கடக்கும் 

அழகின்  வலிமை  காண்பவரை  வசப்படுத்தும் 
அறிவின்  வலிமை அரசாட்சி  செய்யும் 

அன்பின்  வலிமை அகிம்சையைப்  போதிக்கும் 
பண்பின்  வலிமை நல்ல  பழக்கத்தை  ஏற்படுத்தும் 

எண்ணத்தின்  வலிமை எதிர்காலத்தை  உருவாக்கும் 
மக்களின்  வலிமை  எதையும்  சாதிக்கும்

இராணுவத்தின் வலிமை தேசத்தைப்  பாதுகாக்கும் 
தேசத்தின்  வலிமை குடிகளை  உயர்த்தும் 

உழைப்பவன்  வலிமை உற்பத்தியைப்  பெருக்கும் 
போராட்டத்தின்  வலிமை  உரிமைக்கு  வழிகாட்டும் 

சர்வாதிகாரியின்  வலிமை  ஜனநாயகத்தைச்  சாகடிக்கும் 
குடியரசின்  வலிமை மக்களை  ஒன்றுபடுத்தும்  

பெண்மையின்  வலிமை  குடும்பத்தைக்   கட்டிக்காக்கும் 
சமூகத்தின் வலிமை  சந்ததியைப்  பாதுகாக்கும் 

ஒற்றுமையின்  வலிமை ஓங்கி  வளர  உதவும் 
ஈகையின்  வலிமை இல்லாமையைப்  போக்கும் 

-----------த .சத்தியமூர்த்தி 

Saturday, 1 January 2022

வசந்தம் வீசும் புத்தாண்டே வருக

 வசந்தம்  வீசும்  புத்தாண்டே  வருக !!

ஆயிரமாயிரம்  நம்பிக்கையோடு 
பூத்தது  புதிய  புத்தாண்டு !!

வசந்தம்  வீசி  வாழ்வில்  இனிமை  சேர்க்க 
வந்து  பிறந்தது  புத்தாண்டு !!

கொரோனா  என்னும்  கொடிய  நோயிலிருந்து 
சமூகம்  விடுபட  மலர்ந்தது  புத்தாண்டு !!

மக்களின்  மனதில்  மகிழ்ச்சி  வெள்ளம்  
கரைபுரண்டோட  கட்டியம்  கூறட்டும்  புத்தாண்டு !!

உழைப்பவர்  வாழ்வில்  உரிமை  மலர்ந்திட 
உதவட்டும்  இந்த  புத்தாண்டு !!

தமிழர்  வாழ்வு   எல்லா  நிலையிலும்  தலை  நிமிர்ந்து 
வீறு  கொண்டு  நடை  போட துவங்கட்டும்  புத்தாண்டு !!

நேர்மையின்  சின்னமாய்  தமிழ்  மக்கள்   
தடைகளைக்  கடந்து  ஓரணியில்  திரள  வாழ்த்தட்டும் புத்தாண்டு !!

இனி  தொட்டதெல்லம்  பொன்னாக  
செல்வமழை  பொழிய  பூக்கட்டும்  புத்தாண்டு !!

இன  உணர்வும் , மொழி  உணர்வும்  தமிழரின் 
இரு  விழியாய்  மலர மலரட்டும்  புத்தாண்டு !!

சமத்துவம்,  சகோதரத்துவம் ,  சமூகநீதி   மூன்றும் 
தமிழரின்  அடையாளமாய்   திகழ  விடியட்டும்  புத்தாண்டு !!

உலகெங்கும்  வாழும்  எம்  தமிழ்க் குடிமக்களுக்கு 
உற்சாகமான   இனிய  புத்தாண்டு  நல்வாழ்த்துக்கள் !!!!

---த .சத்தியமூர்த்தி