நினைவில் நின்ற கதை-6
எப்படியும் என் எண்ணத்தை வெளிப்படுத்தி விட
ஒவ்வொரு முறை முயன்றும் எதோ ஒன்று தடுத்தது
மயக்குகின்ற மாலைப்பொழுதில் மல்லிகையைத் தலையில் சூடி
மஞ்சள் பூசிய மகாலட்சுமி எனை நோக்கி மெல்ல வந்தாள்
"ஆளை விழுங்குவது போல பார்த்துக் கொண்டே
இருந்தால் போதுமா ?"
தேனிதழை மெல்லத் திறந்து பேசினாள்
அதிர்ச்சியும், ஆனந்தமும் , ஒரு சேர கலந்து,
அசையாமல் அவளைப் பார்த்தபடி நிற்கிறேன்
எனக்கில்லாத தைரியம் அவளுக்காவது ஏற்பட்டதே !
மகிழ்ச்சியில் என் மனம் துள்ளியது
"காலத்தைக் கடத்தினால் கானல் நீர் போல்
காணாமல் போயிடுவேன்
பெண் பார்க்கும் படலம் வீட்டில் தொடங்கிவிட்டார்கள் "
மறுபடியும் அவளே பேசினாள்-- நான் சிரித்தபடி
"கண்ணில் ஆரம்பித்த நம் காதல் மங்களமாய்
கல்யாணத்தில் தான் முடியும் , கவலைப் படாதே "
என் பேச்சைக் கேட்டதும் அவள் கண்ணில்
தாரை தாரையாய் கண்ணீர் வழிந்தது
என்ன தான் அவளுக்கு ஆறுதல் சொன்னாலும்
எனக்குள் ஒரு வித பயம் ஆரம்பித்தது
காதலிக்க இரு மனம் ஒன்று பட்டால் போதும் - ஆனால்
திருமணத்திற்கு எத்தனை மனம் ஒன்று சேர வேண்டும்
எப்படியாவது எங்களை ஒன்று சேர்த்து விடு
கண்ணில் பட்ட தெய்வத்திடமெல்லாம்
வேண்டுகோள் வைத்தேன்
களத்தில் இறங்கி அவள் கவலையைத் தீர்க்க
பதிப்பக முதலாளியைத் தேடிச் சென்றேன்
-----த .சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment