சந்தைநோக்கி
ஒத்தை வண்டி மாடு பூட்டி
அத்தை மகளைக் கூட்டிக்கிட்டு
சந்தை நோக்கி நானும் போறேன்
சந்தோஷமாகப் போறேன்
தென்னை மரத்தோப்பு தாண்டி
தெற்கு பக்க கோயில் தாண்டி
எல்லையோர காவல் தாண்டி
எட்டுத் திக்கும் கூடும் கூட்டம் தாண்டி
வேகமாக நானும் போறேன்
வேண்டியதை வாங்கப் போறேன்
அக்கம்பக்க கிராம ஜனம்
அத்தனையும் கூடியிருக்க
நடைபாதை கடைகள் அங்கே
தொடராகத் தோன்றியிருக்க
அத்தைமகள் கேட்டதெல்லாம்
அள்ளிக்கொண்டு வீடு வந்தோம்
கொண்டு சென்ற பணமெல்லாம்
பொருளாக மாறிவிட
கோதையவள் முகமெல்லம்
தாமரையாய் பூத்துவிட
சிரித்துக்கொண்டே வீடு வந்தாள்
வட்டமுக பொட்டழகி
----த .சத்தியமூர்த்தி