Sunday, 30 October 2022

Ena Unarvu

 இன  உணர்வு 

இலங்கையில்  தமிழினம்  கொன்று  அழித்தபோது  
இன  உணர்வு  அற்று  கிடந்தோம்  

தமிழக  மீனவர்கள்  தொடர்ந்து  தாக்கப்படும்போதும் 
அமைதி  காத்தோம் 

சமீபத்தில்  தமிழக  மாணவர்கள்  ஆந்திராவில்  சுங்கச்சாவடியில் 
பயங்கர  ஆயுதங்களால்  கொடுமையாக  தாக்கப்பட்டார்கள் 

இதைக் கண்டித்து  அரசு  சார்பில்  ஒரு  குரலும்  ஒலிக்கவில்லை 
ஏனிந்த    இழிநிலை ?

ஜாதிப்பற்று  மிகுந்து , ஜாதிசங்ககள்  அமைத்து  
தமிழர்கள்  பிரிந்துக்  கிடைப்பதால், 

இனப்பற்று  இம்மியளவும்  இல்லாமல்  போனதால் ,
மொழியால்  நாம்  எல்லோரும்  தமிழர்  என  உணராததால்,

பிரித்தாளும்  சூழ்ச்சிக்கு  இரையாகிப்  போனதால்,
ஆரியமும் , திராவிடமும்  சேர்ந்து  நம்மை  ஏமாற்றியதால், 

நம்மால்  நம்மை  காப்பாற்றிக்கொள்ள  முடியவில்லை !!

நமக்காக  குரல்  கொடுக்கும்  அரசு  இங்கு  அமையும் வரை 
நமக்கு  இதுதான்  தொடரும்  

மொழிப்பற்றையும்  இனப்பற்றையும்  இரு  விழியாக  கொள்வோம் 

ஜாதி , மதங்கடந்து  தமிழர்கள்  அனைவரும்  ஓரணியில் 
அணி  திரள  வேண்டும்  

தெலுங்கர் , கன்னடர் , மலையாளர் , இவர்களைப்  பார்த்தாவது 
தமிழர்களே !! இன  உணர்வு  கொள்ளுங்கள் 

கடல் கடந்து  ஆட்சி  செய்த  தமிழினம்  
இனியாவது  விழித்துக்கொள்ளுமா ?

தனக்கான  தலைவனை  சரியாக  தேர்தெடுக்குமா ?

---த .சத்தியமூர்த்தி 



Sunday, 16 October 2022

Ponniyin Selvan

 பொன்னியின்  செல்வன் 

புலிக்கொடி பறந்து,  புயலென  புறப்பட்டு,  சீறிவரும்
அலை மீதே , சிங்கமென  கடற்படை  நடத்தி , 

இலங்கை,  தென்கிழக்கு ஆசியாவையே  தன்  வசப்படுத்தி ,
அகண்ட  பேரரசை  அமைத்த , ஈடு  இணையற்ற  

ஒப்பற்ற  ஒரே  இந்தியப்  பேரரசு  
"சோழ  சாம்ராஜ்ய  பேரரசு"     

சோழ நாடு  சோறுடைத்து  
கங்கை  கொண்டான்  
கடாரம்  கொண்டான் 
இவையெல்லாம்  சோழனின்  பெருமைக்கு  சான்று 

கல்லணை  அமைத்து,  நீர்  மேலாண்மையைப்  படைத்தது ,
காவிரி  டெல்டா பகுதியில்  விவசாயத்தில்  புரட்சி  செய்து  ,

அனைவருக்கும்  உணவளித்த  மாபெரும்  அரசே  
சோழப்   பேரரசு!!

தமிழனின்  பெருமையை  தரணிக்கு  எடுத்துச்சொல்ல  
தஞ்சைப்  பெரிய  கோயிலை  பிரம்மாண்டமாய்  வடிவமைத்து,  

கட்டுமானத்துறையில்  ஆயிரம்  ஆண்டுகளுக்கு  முன்பே  
மாபெரும்  சரித்திரம்  படைத்தது  சோழப்  பேரரசு!!

மாவீரன்  இராஜராஜசோழன், மாவீரன்  இராஜேந்திரசோழன், 
இவர்களின்  வரிசையில்  மாவீரம்  மேதகு  பிரபாகரன் ,

இவர்களெல்லாம்  தமிழனின்  மாண்பை  உயர்த்திப்பிடித்த  
வணக்கத்துக்குரியவர்கள்

சேர , சோழ , பாண்டிய  மூவேந்தர்களும்  
ஆண்ட  காலமே  தமிழகத்தின்  பொற்காலம்   

தலைப்பையொட்டி  சொன்ன  செய்தி  கொஞ்சம்தான்
 
தமிழனின்  உண்மை  வரலாற்றை,  இளைய  சமூகம்
முழுமையாய்  கற்றுத்   தெளிந்திட  வேண்டும்.

வீரம்  ,மானம்,  ஈகை , இன  உணர்வு  நிறைந்த 
தமிழ்  சமுதாயம்  உருவாக  உண்மையாக  பாடுபடுவோம்  

----த .சத்தியமூர்த்தி
   

Sunday, 2 October 2022

Gandhi Jayanthi

காந்தி  ஜெயந்தி  

அகிம்சையைப்  போதித்த  அண்ணலின்  ஜெயந்தி
மனிதகுலம்  அதிசயத்த  மாமனிதனின்  ஜெயந்தி 

எளிமையின்  சின்னமாய்  வாழ்ந்த  மகாத்மாவின்  ஜெயந்தி 
சுதந்திரக்  காற்றை  சுவாசிக்க  வாய்த்த  புனிதனின்  ஜெயந்தி 

வெள்ளையரை  நடுங்க  வைத்த  வேங்கையின் ஜெயந்தி 
பரங்கியரைத்  துரத்தியடித்த  பாமரனின்  ஜெயந்தி 

மண்ணை  நேசித்த  மனிதருள்  மாணிக்கத்தின்  ஜெயந்தி 
மாபெரும்  சரித்திரம்  படைத்த  சாதனையாளரின் ஜெயந்தி 

விடுதலையைப்    போற்றிய  மாவீரனின்  ஜெயந்தி 
அனைவரையும்  ஒருங்கிணைத்த  அதிசயத்தின்  ஜெயந்தி 

சுதேசியின்  சின்னமாய்  வாழ்ந்த  சுதந்திரத்தின்  ஜெயந்தி 
கைராட்டையை  ஆயுதமாய்  பயன்படுத்திய  காவியத்தின்  ஜெயந்தி 

விடுதலைக்குப்  பின்பு  பதவியை  விரும்பாத  தியாகியின்  ஜெயந்தி 
மக்களின்  ஒற்றுமைக்காக  தன்னுயிரை  ஈந்த 
மாபெரும்  தலைவனின்  ஜெயந்தி 

அடிமையென்னும் விலங்கை  உடைத்தெறிந்த  அற்புதச்சுடரின்  ஜெயந்தி 
வாழ்நாள்  முழுவதும்  மக்களுக்காகவே  உழைத்த  வள்ளலின்  ஜெயந்தி 

கொலை செய்த  பாவியையும்  மன்னித்த  உத்தமனின்  ஜெயந்தி 
மக்களின்  நம்பிக்கையின்  ஒற்றைச்  சொல்லாய்  ஒலித்த  
மகாத்மா  காந்தியின் ஜெயந்தி 

நன்றியோடு  வணங்குவோம்  -- அந்த 
உத்தம  தலைவனின்  பாதம்  தொட்டு
  
காலங்காலமாய்  இங்கே  தொடந்து  
வாழ்வது  காந்தீயக்  கொள்கைகளே 

----த .சத்தியமூர்த்தி