பெண்ணுக்குப் பிடித்தவை -2
பாசத்துக்காக ஏங்குவதே பெண்ணுக்குப்
பிரியமான வழக்கம்
சொந்தங்கள் சேர்ந்து நின்று வாழ்த்த
மணமகளாய் மங்கள நாண் சூடும் நாளே
பெண்ணுக்கு பிடித்த திருநாள்
கணவனைத் தன் கண்ணுக்குள், நெஞ்சுக்குள் ,
பொத்திப் பாதுகாக்கப் பிரியம்
கணவனுக்கு வாய்க்கு ருசியாய் வகை வகையாய்
சமைத்து பரிமாறப் பிரியம்
கட்டிய கணவனின் கையைப் பிடித்து கம்பீரமாய்
கடைத்தெருவில் உலா வர பிரியம்
கணவன் ஒழுக்கமானவனாக அமைந்து விட்டால்
கர்வத்துடன் சமூகத்தில் சொல்லி சொல்லி வலம் வர பிரியம்
தாய் வீட்டிற்கு போவதென்றால் தாங்க
முடியாத கொள்ளைப் பிரியம்
தாயாகப் போகிறோம் என்று தெரிந்தவுடன்
தன் தாயின் மடிமீது தலை வைக்கப் பிரியம்
தாங்க முடியாத வலியோடு துடித்தாலும்,
பிறந்த குழந்தையின் முகம் பார்த்து முத்தமிடுவதில் பிரியம்
கிண்ணத்தில் சோறோடு பருப்பு , நெய் கலந்து
பாசத்தையும் சேர்த்து, மழலைக்கு நிலவைக் காட்டி
அன்னம் ஊட்ட அத்தனை பிரியம்
கன்னத்தில் மையிட்டு, பொட்டிட்டு , தலையைச் சீவி பூச்சூடி
தன் குழந்தையை தேவதையாய் அலங்காரம் செய்ய பிரியம்
குழந்தையை தொட்டிலிட்டு தாலாட்டு பாட பிரியம்
சொந்தமாய் வீடு ஒன்று கட்டி அதில் குத்துவிளக்கு
ஏற்ற கொள்ளைப் பிரியம்
---த .சத்தியமூர்த்தி