Saturday, 28 August 2021

Vaazhkai part-2

 வாழ்க்கை -2

வாழ்க்கையின்  அடிச்சுவட்டை  ஆராய்ந்து  
பார்க்குங்கால்  வினோத  நிகழ்வுகள் தாராளம் 
விபரீத  நகர்வுகள்  ஏராளம் 

இல்லாதவனை  இகழ்வதும்,
  இருப்பவனைப்  புகழ்வதும், 
வறியோனை   வாட்டுவதும் ,
 வலுத்தவனை  கொழுத்தவனாக்குவதும்,

காசுக்காக  காவடி  எடுப்பதும்,
பல்லிளித்து  பல்லக்கு  தூக்குவதும்,  

எப்படியேனும்  வாழ்க்கையில் வெற்றி பெற
வேண்டுமென  வெறிகொண்டு  அலைவதும், 

வாழ்க்கையே !!  நீ  விபரீதக்  கண்ணாடி -- அதன்
முன்னாடி  நின்று  பார்க்கும்போது  தான்  நம் 
முகமூடி  கிழிந்து  முழுவடிவம்  தெரியும்.    

இலட்சியத்தோடு  வாழ்பவனை, 
 கொள்கையோடு  நடப்பவனை, 
உண்மையோடு  இருப்பவனை,
 
உயிரோடு  இருக்கும்  காலம்  மட்டும் 
கண்டுகொள்ளாத உலகம் 

வரலாற்றில் அவன்  பெயரை 
பொன்னெழுத்தில்  பதிக்கும்
 
பிழைக்க  தெரியாதவன் என்று
பிதற்றுபவன்  எல்லாம் 

வாழும்  காலத்தில்  வசதியோடு  இருந்தாலும் 
மூச்சடங்கி  முடித்தபின்னே, 
கூட்டத்தில்  ஒருவராகி  காணாமல்  போயிடுவர். 

வாழ்க்கை  சொல்லித்தரும் 
அரிய  தத்துவம்  இதுவே !!

வாழும்  காலத்திற்கு பின்பும்  
வரலாற்றில் அழுத்தமாய் 
 நம்  பெயர்  பதிப்போம். 
 
வரலாற்றில் இடம்  பிடித்து  
சாதனை  படைப்போம். 

---த .சத்தியமூர்த்தி  

   










 




Saturday, 21 August 2021

Vaazhkai

வாழ்க்கை 

வாழ்க்கை    வாழ்வதற்கே 
வாழ்க்கை  சிலருக்கு  வசப்படும்  

வாழ்க்கை  பலருக்கு  போராட்டக்களம் 
வாழ்க்கை  சிலருக்கு  போதி மரம்

வாழ்க்கை  தினம்  தினம்  பாடம் புகட்டும்
வாழ்க்கையில்  வசந்தமும்  வீசும்
 
வாழ்க்கையில்  புயலும்  தாக்கும் 
வாழ்க்கை  வரலாற்றைப்  படைக்கும்
 
வாழ்க்கை  வசதி  வாய்ப்பைப்  பெருக்கும் 
வாழ்க்கை  வெற்றி  தோல்வியின்  கலவை 

வாழ்க்கை  திரும்பக்  கிடைக்காத  பொக்கிஷம் 
வாழ்க்கை  நீண்ட  தூரப்  பயணம்
 
வாழ்க்கை  வறண்ட  பாலையில்  தேனுற்று 
வாழ்க்கை  எப்போதும்  புது  புது  நம்பிக்கை
 
வாழ்க்கை  இயற்கை  அளித்த  நற்கொடை 
வாழ்க்கையின்   இலட்சியமே  பிறருக்கு  உதவுவதே 

வாழ்க்கையின்  வெற்றியே  மகிழ்வுடன்  வாழ்வதே 
வாழ்க்கையே  அழகான ஓவியம் 

வாழ்க்கையே  அன்பான  காவியம் 
எல்லோரையும்  நலமாக  வாழ வைத்து

நாமும்  ரசனையோடு  வாழ்வோம் 

-------------த .சத்தியமூர்த்தி 
   

Saturday, 7 August 2021

ezhathin parithaba nilai

ஈழத்தின்  பரிதாப  நிலை  

ஈழத்தமிழர்களின்  வழிபாட்டு தலங்கள்  மீதும் 
தொடர்  குண்டுகள்  வீசப்பட்டன 

தமிழரின்  யாழ்ப்பாண  நூலகம்  
தீ  வைத்து  எரிக்கப்பட்டது 

இரத்தக்  கறைப்படிந்த   பௌத்த  பிட்சுகளைப் 
பார்த்து  புத்தரின்  விழிகளில்  இரத்தம் வழிந்தது 

இந்தியாவில் தோன்றிய  புத்த  மதம்  நல்ல 
வேளையாக  நாடு  கடத்தப்பட்டது 

இறுதி  யுத்தம்  முடிந்து  ஆண்டு  பல  கடந்தும் 
இன்னும்  உரிமைக்  காற்றை  சுவாசிக்க  முடியவில்லை 

உலகமுழுவதும்   தமிழினம்  பரவி  இருந்தும் 
அதற்கென  சொந்தமாக ஒரு  நாடு  இல்லை 

அதன்  உரிமைக்கு  போராட  ஒரு  நாதியில்லை 

அதனால் தான்  அகதிகளாய்,  அடிமைகளாய், 
ஆங்காங்கே  அவதிப்படுகின்றோம் .

முகில்  கிழித்து  வெளிவரும்  முழுமதியை  போல்,
கடல்  கிழித்து  புறப்படும்  ஆயிரம்  சூரியன் போல்,

ஆர்ப்பரித்து  அணிவகுத்து  வரும்  கடலலையைப் போல்,
இனத்தைப்   பாதுகாக்க  தியாகத்தின்  திருவுருவமாய்
  
இன்னுயிரையும்  கொடையாய்  கொடுக்கவல்ல
மாசு  மருவற்ற  நம்  தலைவன்  மீண்டும்  தோன்றுவான் 

அவன்  தலைமையில்  தமிழினம்  கம்பீரமாய் 
வெற்றி  நடை  போடும் 

-----------------த .சத்தியமூர்த்தி