Sunday, 29 January 2023

Manam

மனம்  

மனத்துக்கண்  மாசிலனாதல் - அனைத்தறன்  ஆகுல 
நீர  பிற  -- வள்ளுவன்  வாக்கு 

உள்ளத்தளவில்  ஒருவன்  குற்றமற்றவனாய்  இருந்தால்  போதும் 
மேற்கொண்டு  எந்த  அறமும்  செய்யத்  தேவையில்லை 

மனமது  செம்மையானால்  மந்திரம்  எதுக்கு ?
மனமிருந்தால்  மார்க்கம்   உண்டு 

மனம் போல்  மாங்கல்யம்  
மனம்  போல்  வாழ்வு 

மனமே  ! நீ  கொஞ்சம்  இளைப்பாறு !!
மனமே  ! நீ  கொஞ்சம்  களைப்பாறு !!

மனம்  ஒரு  குரங்கு -  ஆட்டுவிக்கும் 
 ஆடவைக்கும்  நம்மை  மாட்டவைக்கும் 

மனம்  ஒரு கண்ணாடி - நம்  எண்ணத்தைப்  பிரதிபலிக்கும் 
மனம்  ஒரு குதிரை - நமக்கு  குழிப்   பறிக்கும் 

மனம்  ஒரு இயந்திரம் - சதா  இயங்கிக்கொண்டே  இருக்கும் 
மனம்  ஒரு காற்றாடி - அலைந்து  திரிந்து  சிக்கிக்கொள்ளும் 

மனம்  ஒரு பறவை - பறந்துக்கொண்டே  இருக்கும் 
மனம்  ஒரு பந்து - குதித்துக்கொண்டே  இருக்கும் 

மனம்  ஒரு  நரி - தந்திரம்  செய்துகொண்டே  இருக்கும் 
மனம்  ஒரு பச்சோந்தி - மாறிக்கொண்டே  இருக்கும் 

மனதைப்  பக்குவப்படுத்த  உயர்வு  உண்டு 
மனதை  அடக்கிப்  பழக  நிம்மதி  உண்டு 

மனதோடு  உறவாட  மகிழ்ச்சி  உண்டு 
மனதில்  உறுதி  இருந்தால்  வெற்றி  உண்டு 

மனம்  ஒரு  பொக்கிஷம் பாதுகாத்துக் கொள்வோம்
மனம்  ஒரு  தெளிந்த  நீரோடை  நல்லதையே  நினைப்போம் 

----த .சத்தியமூர்த்தி  

Sunday, 22 January 2023

Tamil Nadu

தமிழ் நாடு  

செந்தமிழ்  நாடெனும்  போதினிலே ,
இன்பத்தேன்  வந்து  பாயுது  காதினிலே 
-- பாரதி  வாக்கு 

உழவையும் , நெசவையும்  உயர்த்திப்  பிடித்து 
ஊருக்கே  உணவளித்த  தமிழ் நாடு 

தேமதுர  தமிழோசை  தெருவெல்லாம்  
ஒலிக்கச்  செய்த  தமிழ் நாடு 

நெல்லும்  , கரும்பும்  , மஞ்சளும்  மணக்கும் 
மாண்புகழ்  கொண்ட  தமிழ் நாடு 

மொழியையும்  , மண்ணையும்  , விழி போல
காத்த  நம்  தமிழ் நாடு 

பிறப்பொக்கும்  எல்லா உயிர்க்கும்  என  
போதித்தது நம் தமிழ் நாடு 

குடவோலை  முறையைக்  கொண்டு  தேர்தலை
முதலில்  நடத்திக்  காட்டிய  தமிழ் நாடு 

கணிதம்  ,ஜோதிடம் , வானியல்  ,வைத்தியம் ,பரதம் 
சிற்பக்  கலைகளில்  தேர்ச்சிப்  பெற்ற  தமிழ் நாடு  

வீரத்தின்  விளை  நிலமாய்,  வெற்றிகளைக்  குவித்து
வரலாறு  படைத்த  நம்  தமிழ் நாடு   
 
கடையேழு   வள்ளல்களையும் , வாடிய  பயிரைக் கண்டு  
வாடிய  வள்ளலாரையும்  கண்டது  நம்  தமிழ் நாடு  

தஞ்சமென்று  அடைந்த  பறவைக்காக  தன்  தசையை  
அறுத்த  சிபிச்  சக்கரவர்த்தி  வாழ்ந்த  தமிழ் நாடு

ஏனைய  இடங்களில்  பாமரனாய்  வாழ்ந்த  காலத்திலே
நாகரிகத்தோடு  செழித்து  வாழ்ந்தது  நம்  தமிழ் நாடு 

காண்பவர்  வியக்கும்  வண்ணம்  கட்டிடக்கலையில் 
சாதனைப் படைத்த   நம்  தமிழ் நாடு

தமிழும்  , தமிழரின்  வரலாறும் , தமிழ்நாட்டின்
பெருமையும்  யுகம்  யுகங்களைக்  கடந்தவை 

தொன்று  தொட்டுத்  தொடர்பவை  - நம்  
உயிரோடும் , உணர்வோடும்   ஒன்று  கலந்தவை 

வாழ்க  தமிழ் நாடு !   வளர்க  தமிழ் நாடு !! 
வீறுகொண்டு  எழுக  தமிழ் நாடு  ! வெல்க  தமிழ் நாடு !!

----த .சத்தியமூர்த்தி  

Saturday, 14 January 2023

Tamil Nadu

தமிழ்  நாடு  


வள்ளுவன்  தன்னை  உலகினுக்கு  தந்து  
வான்  புகழ்  கொண்ட  தமிழ் நாடு

கம்பன் , இளங்கோ , பாரதி  என  பெருமைமிகு 
கவிஞர்கள்  வாழ்ந்த   தமிழ் நாடு 

அமிழ்தினும்,  இனிய  தமிழை  சங்கம்  வைத்து  
வளர்த்து,  சாதனை  படைத்த  தமிழ் நாடு 

வந்தாரையெல்லாம்  வாழ  வைக்கும்  பரந்த  
மனம்  படைத்ததெங்கள்  தமிழ் நாடு 

  மானம்  , காதல்  ,வீரம்  , ஈகை , அறம்  
மாண்புகள்  நிறைந்த  நம்  தமிழ் நாடு 

சேர  , சோழ , பாண்டிய  , பல்லவ  மன்னர்கள்  
ஆட்சி  செய்தது  நம்  தமிழ் நாடு 

கடல்  கடந்து  வணிகம்  செய்து , சென்ற  இடமெல்லாம் 
கோலோச்சி  நின்றது  நம்  தமிழ் நாடு

வானை  முட்டும்  கோபுரம்  அமைத்து  
ஆலயம்  கட்டியது  நம்  தமிழ் நாடு

முத்து  , பவழம் , நெற்களஞ்சியம்  என  
கொட்டிக்கிடந்தது  நம் தமிழ் நாடு 

சித்தர்கள்  , ஞானிகள்  , யோகிகள்  வலம்  வந்து  
மண்ணை  ஞான  பூமியாக்கியது  தமிழ் நாடு 

விருந்தோம்பலை  விரும்பியே  செய்து  அன்போடு 
உபசரிக்கும்  பண்பான  பூமி  தமிழ் நாடு 

முறத்தால்  புலியை  விரட்டியடித்த  வீரத்தமிழச்சி 
உலா  வந்த  மண்ணே  நம்  தமிழ் நாடு

ஆராய்ச்சி  மணியடித்து , நீதி  கேட்ட  பசுவிற்காக  தன்
மகனை  தேரேற்றிக்  கொன்று அறம்  படைத்த  தமிழ் நாடு 
-----தொடரும் 


புவன முழுவதும்  பரவி  வாழும்  எம்  தமிழ்ச்  சொந்தங்களுக்கு  
 மனங்கனிந்த  இனிய   பொங்கல்  நல்வாழ்த்துக்கள் ...

---த .சத்தியமூர்த்தி  

Saturday, 7 January 2023

Panam

பணம்  

பணம்  பத்தும்  செய்யும் 
பணம்  பாதாளம்  வரை  பாயும் 

பணமென்றால்  பிணமும்  வாய்  திறக்கும் 
பணம்  பந்தியிலே , குணம்  குப்பையிலே 

ஏழையின்  சொல்  அம்பலம்  ஏறாது
ஏழைக்கு  ஏது  இங்கு வாழ்வு  ?  

இரும்பு  பெட்டிக்குள்  பூட்டி  வைத்த  பணம்  
இதயத்தை  இரும்பாக்கும்   

பத்து  தலைமுறைக்கு  பணம்  சேர்த்தும்  
போதுமென்ற  மனம்  ஒருக்காலும்  வராது 

மண்ணாசை  , பெண்ணாசையைப்  போல்  
பொன்னாசையும்  விடாது 

பணத்தோடு  பாவத்தையும்  சேர்க்கிறோம் என்பது 
அடுத்த  தலைமுறையின்  அவஸ்தையில்  புரிகிறது 

நேர்  வழியில்  சேர்த்த  பணம்  நிம்மதியைத்  தரும் 
குறுக்கு  வழியில்  வந்த  பணம்  வந்த வழியே சென்று  விடும் 

பணத்தைக்கொண்டு  , தர்மம்  செய்யாமல்  
எண்ணி எண்ணி  அடிக்கி  வைத்து , அழகு  பார்த்து , 

பாவத்தைச்  சுமந்தபடி,  எதையும்  கொண்டு  செல்லாமல் ,
சுடலையில்  வெந்து  சாம்பலாகிறான் 

அள்ளி  அள்ளித்  தந்து  வள்ளலாய்  வாழ்ந்தவனோ  
இறந்த  பின்னும்  இறவாமல்  வாழ்கின்றான் 

வாழ்வின்  வசதிக்கு  பணம்  தேவை  - ஆனால் 
பணம்  மட்டுமே  வாழ்வை  முழுமைப்படுத்தாது  

கோட்டைக்குச்   சென்று  கொள்ளையடிக்கத்தான்  
ஓட்டுக்கு  பணம் தந்து  ஜனநாயகத்தை  சாகடிக்கிறான் 

கை நீட்டி ஓட்டுக்கு  காசுவாங்கியே  மக்களில்  சிலர் 
தங்கள்  உரிமையை  அடகு  வைக்கிறார் 

பணம்  படுத்தும்  பாடு  நம்  எதிர்கால  
தலைமுறையை  பாழ்படுத்தும் ..

அளவுக்கு  அதிகமாக  பணத்தை  ஆண்டவன் கொடுத்தது 
இல்லாத  ஏழைக்கும்   சேர்த்துத்தான்-- அதனால் 

தாராளமாய் தர்மம்  செய்யுங்கள்  
தர்மம்  செய்வதால்  உங்கள்  பணம்  பன்மடங்கு  பெருகும் 

---த .சத்தியமூர்த்தி    

Sunday, 1 January 2023

Puthande Varuga -2023

புத்தாண்டே  வருக -2023

புத்தொளி  வீசும்  புத்தாண்டே  வருக !
வசந்தம்  வீசும்  நல்லாண்டே  வருக !

மக்கள்  வாழ்வில்  மலர்ச்சி  பொங்க  வருக !
நாடு  முழுதும்  மகிழ்ச்சி  வெள்ளம்  கரை புரள வருக !

கொடுத்துதவும்  கொள்கை  பரவ வருக !
கோட்டையை  ஆள்வோர்  நீதி  வழியில்  ஆளும்  ஆண்டாக  மலர்க !

நல்லோர்  நினைப்பது  நடக்கவே  கட்டியங்கூறி  வருக !
நாளும் , நாளும்  வளர்ச்சிப்  பாதையில்  நாடே  வளர வருக !

எங்கும்  எதிலும்  ஏற்றம் கானவே  வருக !
ஏழைகள்  வாழ்வில்  நம்பிக்கை  பெருகும்  ஆண்டாக மலர்க !

மங்களம்  பெருகி  நல்லறம்  காண வருக !
மாநிலம்  முழுதும்  அமைதி  தவழ வருக !

சமத்துவம் , சகோதரத்துவம் , சமூகநீதி காக்க  வருக !
சாமானியனுக்கும்  சகலமும்  சென்று  சேரும்  ஆண்டாக மலர்க !

பாலும் , தேனும் , பெருகி  ஓடும்  ஆண்டாக  வருக !
பழைய  கஞ்சிக்கு   விடை  கொடுக்கும்  ஆண்டாக  மலர்க !

எல்லார்  கையிலும்  தாராளமாக  பணம்  புரளும்  ஆண்டாக  வருக !
எடுத்த  காரியம்  யாவும்  வெற்றி  காணவே  வருக !

பழங்கதை  பேசும்  பழக்கத்தை  மற்றும்  ஆண்டாக வருக !
பாரத  தேசம்  வறுமை  அகற்றும் ஆண்டாக  மலர்க !

எல்லாத்துறையிலும்  லஞ்சம்  ஒழியும்  ஆண்டாக  வருக !
ஏன்  ? எதற்கு  ? எப்படி ? கேள்வி  கேட்கும்  ஆண்டாக  மலர்க  !

மக்களாட்சியில்  மக்கள்  கரங்களே  ஓங்கி  நிற்கும் ஆண்டாக  வருக !
ஆதிக்க  சக்திகள்  அஞ்சி  நடுங்கி  அடி  பணியும்  ஆண்டாக  மலர்க !

உழைப்பவனுக்கே  உரிமை  கிடைக்கும்  ஆண்டாக  வருக !
ஊர்  கூடி  தேர்  இழுப்போம் . ஒற்றுமையாய்  வருக !

----த .சத்தியமூர்த்தி