Sunday, 25 December 2022

Kalvi

  கல்வி

கேடில்  விழுச்செல்வம்  கல்வி  ஒருவர்க்கு
 
கற்க  கசடற  கற்றவை  - கற்றபின் 
நிற்க  அதற்குத் தக - வள்ளுவன்  வாக்கு 

அன்னசத்திரம்  ஆயிரம்  அமைத்தல் 
ஆண்டவனுக்கு  ஆலையம்  கட்டுதல் 

பொதுவிடத்தில்  குளம்  வெட்டுதல்  
எல்லாவற்றிக்கும்  மேலாய்  

ஆங்கோர் ஏழைக்கு  கல்வி  கற்கச்  செய்வதே 
அனைத்திலும்  சாலச்சிறந்தது 

பொன்  படைத்தோர்க்கு  வாழும்  இடம்  சிறப்பு 
கற்றவர்க்கு  செல்லுமிடமெல்லாம்  சிறப்பு 

  கல்வி  மனிதர்க்கு  கண்களுக்கு  ஒப்பானது 
  கல்வி தான்  மானுடத்தை  உயர்ந்த  நிலைக்கு  செதுக்குகிறது 

கல்வி தான்  வறுமைக்கு  விடை  கொடுக்கிறது 
  கல்வி தான்  நம்பிக்கையோடு  நம்மை  வாழ  வைக்கிறது 

  கல்வி அறிவை  வளர்த்து , ஆற்றலைப்  பெருக்குகிறது ,
கல்வி  தான்  சமூகத்தைக்  கட்டியெழுப்பும்   தூண்களாகும் 

பள்ளிக்கூடங்கள்  அமைத்து  , மதிய  உணவும்  அளித்து ,
சீருடைத்  தந்து,  மாணவர்களைச்   சரிசமமாக்கி 

கல்விக்குக்  கண்  திறந்த  பெருந்தலைவர்  காமராசரை 
இக்கணத்தில்  நன்றியோடு நினைத்துப்  பார்ப்போம் 

வாசிப்பை  நேசிப்பவன் வாழ்வு  வசந்தமாகும் 
நல்ல  நல்ல  நூல்களெல்லாம்  நன்னெறிக்கு  வழிகாட்டும்     

அனுபவம்  கூட  அன்றாடம்  படிக்கும்  பாடமாகும் 
படிப்பறிவும் , பட்டறிவும்  பட்டைத்  தீட்டிக்கொள்ளவேண்டும்  

எழுத்தறிவித்தவன்  இறைவனாவான்  
மக்களின்  தலையெழுத்தை  மாற்றுபவனே 
 மாபெரும்  தலைவனாவான்

அறிவார்ந்த  சமூகம் அமைத்து  அனைவரையும்  பாதுகாப்போம் 

--த .சத்தியமூர்த்தி   

Saturday, 17 December 2022

Porumai

பொறுமை 

பொறுத்தார்  பூமி  ஆள்வார் 
பொறார்  காடு  கொள்வார் 

பொறுமை  கடலினும்  பெரிது 
பொறுமையே  எல்லோருக்கும்  பெருமை 

அமைதியின்  உச்சமே  பொறுமை 
அகிம்சையின்  வெள்ளமே  பொறுமை 

மழலைக்காக  தாய்  பத்துமாதம்  தவமிருப்பது  பொறுமை 

தவழ, நடக்க, ஓட , பேச , எழுத , கற்க  
எல்லாவற்றிற்கும்  தேவை பொறுமை 

வேலை  தேடி  அலைபவர்க்கு , நிச்சயம்  தேவை பொறுமை 
வேண்டியதெல்லாம்  கிடைப்பதற்கு  தேவை பொறுமை 

காதலிக்காக  காலமெல்லாம்  காத்திருப்பது  பொறுமை 
மனைவியை  மகிழ்ச்சியுடன்  வாழவைக்க  தேவை பொறுமை 

அதிகாரத்தில்  இருப்பவர்க்கு , அவசியம்  தேவை பொறுமை 
மக்களுக்கான  உரிமையை  மீட்டெடுக்க  காலம்  தந்த  கொடையே  பொறுமை 

சண்டை  , சச்சரவின்றி  நம்மை  வாழவைப்பதும் பொறுமை 
சமாதானத்தை  நிலைநாட்டும்  அட்சயப்பாத்திரமே  பொறுமை 

பொறுமையென்னும்  நகையணிந்து  பெண்கள்  
பெருமை கொள்ளவேண்டும் 

அவ்வையின்  அமுத வாக்கை  தெய்வவாக்காக கொள்ளவேண்டும் 

தனிமனிதனின்  பொறுமை  சமூகத்தை  உயர்த்தும் 
சமூகத்தின்  பொறுமை  தேசத்தை  உயர்த்தும்  

மக்களுக்கான  தலைவனை அடையாளம்  காண  தேவை பொறுமை 

   மானம் , வீரம்,  நிறைந்த தமிழ்  சமுதாயத்தின்  
அடையாளமே  தமிழ்க்  குடியின்  பொறுமை 

சகிப்புத்தன்மையும் , நம்பிக்கையும் , பொறுமையும், 
  வெற்றியின்  சின்னங்களாகும் 

பொறுமையைப்  பேணி  பெருமை  கொள்வோம் 

---த .சத்தியமூர்த்தி 

  

Sunday, 4 December 2022

Paadam

பாடம்  

அடிமைகளாய் கிடந்த  மக்களை  ஒன்று  திரட்டி ,
விடுதலைக்கு  வித்திட  வீரர்களாய்  மாற்றியது  ஒரு  பாடம் 

பசியால்  வாடும்  பாமரருக்கும்  அவர் தம் பசிப்பிணி 
போக்கி  வாட்டம்  தீர்ப்பது  ஒரு  பாடம் 

மக்களுக்கான  அரசாங்கத்தை  மக்களே  தீர்மானிக்கும் 
ஜனநாயகம்  கற்றுத் தந்தது   ஒரு  பாடம் 

ஊர்  கூடி  இழுக்க  தேர்  நகரும் - அது  போல 
ஒற்றுமையே  நம்மை  உயர்த்தும்  என்பதும்  ஒரு  பாடம் 

மதமெனும்  மாயை  விடுபட  விடுபட  இந்த  
மானுடம்  உயரும்  என்பது  ஒரு  பாடம் 

ஜாதியின்  பேரால்  தமிழினம்  பிரிந்து  கிடப்பதால் 
தன்னிலை  மறந்து  தாழ்ந்து  கிடப்பது  ஒரு  பாடம் 

ஆதியிலிருந்த  பெருமைகளையெல்லாம்  பாதியிலே  
தொலைத்ததனால்  அடிமைப்பட்டு  கிடப்பது  ஒரு  பாடம் 

மதுவுக்கு  அடிமையாகி  ,மதியை  இழந்ததால் 
தொழிலிலிருந்து  தமிழரை  அப்புறப்படுத்தியது  ஒரு  பாடம் 

வந்தரையெல்லாம்  வாழவைத்து , கொழுக்க வைத்து 
வாடி  வதங்கி  தமிழர்கள் கிடப்பதும் ஒரு  பாடம் 

பணத்தை  வாங்கிக்கொண்டு , வாக்கை  செலுத்தி விட்டு
காலமெல்லாம்  கஷ்டப்படுவதும்  ஒரு  பாடம் 

அனுபவம்  சொல்லித்  தந்த  அத்தனை  பாடத்தையும் 
அனுபவித்தப்  பின்னும்  தமிழினம்  தலையெடுப்பது  எக்காலம் ?

மண்ணுக்கான  தலைவனை  மக்கள்  அடையாளங்காண்பது 
எக்காலம் ?

அது தான்  தமிழர்களின்  பொற்காலம் ..

-த .சத்தியமூர்த்தி