சேரிக்கு என்று விடியல் ?(1)
கட்சிக்கொடி ஏற்றி வைத்து
காலமெல்லாம் கஷ்டப்பட்டு
ஆட்சிகளை மாற்றி இவங்க
ஆனவரை பார்த்துட்டாங்க
ஆண்டு பல சென்றாலும்
இவங்க மட்டும் குடிசையிலே
ஊரை விட்டு தள்ளி வச்சி
காலணின்னு பேரு குத்தி
காலமெல்லாம் சேரிக்குள்ளே
வாழ்ந்துட்டாங்க ?
இவங்க கண்டதெல்லாம்
காத்து மழை இடியைத் தாங்க
தேர்தல் வரும் காலம் மட்டும்
தேடி வர ஆட்கள் உண்டு
உங்கள் வீட்டுப்பிள்ளை என்று
உறவு முறை பாடிக்கிட்டு
ஓட்டு கேட்கும் உத்தமரை
நாலடுக்கு மாளிகை முன்
கால் கடுக்க காத்து நின்றும்
பார்க்காமல் போனதுண்டு
தேசத்தோட கௌரவமே
சேரிக்குள்ள அடக்கமுங்க
காசு பணம் கம்மின்னாலும்
குழைந்தைக்கு குறைவில்லே
ஆன மட்டும் விலகியிருந்தும்
அடுத்தடுத்து பிறந்ததுங்க
பட்டினியில் சிலது செத்து
பிணியாலே பலது செத்து
தப்பிச்சது சிலது தாங்க - அதுங்க
ஆயுசு ரொம்ப கெட்டிதாங்க ..
--த.சத்தியமூர்த்தி