Sunday, 27 March 2022

Anbin Magathuvam

 அன்பின்  மகத்துவம் 

அன்பும்  அறமும்  உடைத்தாயின் - இல்வாழ்க்கை 
பண்பும்  பயனும்  அது 

அன்பு  செய்ய  அகிலம்  வசப்படும்  
அன்பு  தான்  அகிலத்தை  ஆட்டுவிக்கும்  

அன்பு  தான்  அனைவரையும் கட்டிப்போடும்  ஆயுதமாகும் 
அன்பு  சுரக்கும்  விழியில்  தான்  கருணை  பிறக்கும் 

அன்புக்காகத்தான்  அனைவரும்  ஏங்குகிறோம் 
அன்பைத்   தேடித்  தான்  அனைவரும்  ஓடுகிறோம் 

அன்பு  நிறைந்த  நெஞ்சில்  தான்  அருள்  பெருகும் 
அன்பு  தான்  உயர்ந்த  சிம்மாசனத்தை  அலங்கரிக்கும் 

 அன்பு  கொடுக்க  கொடுக்க  வற்றாத  ஜீவநதி  
அன்பு  அகிலமுழுவதும்  ஆட்சி  செய்கிறது  

அன்புக்கு  ஜாதியில்லை , மதமில்லை , இருப்பவன்,
இல்லாதவன் என்ற  ஏற்ற தாழ்வில்லை 

அன்புக்கு  தலை  வணங்குவது  படைத்த  
ஆண்டவனுக்கு  தலை வணங்குவதாகும்

ஏனென்றால்  அன்பும்  ஆண்டவனும்  ஒன்று  

அன்பை  விதைத்தால்  ஆனந்தம்  பயிராகும்  
அன்பை  ஆராதித்தால்  ஆரம்பமே  சுகமாகும் 

அன்பை  அச்சாணியாகக்  கொண்டு  உலகம்  சுழல்கிறது 
அன்பை  ஆதாரமாகக்  கொண்டு  நம்  வாழ்க்கை  நடக்கிறது 

அன்பே  நம்  அனைவரின்  மொழியாகட்டும் 
அன்பே  நாம்  விரும்பும்  வழியாகட்டும் ..

--த .சத்தியமூர்த்தி 

Saturday, 19 March 2022

Padikka Arambiyungal

 படிக்க  ஆரம்பியுங்கள் 

கலங்கரை விளக்கம்  கப்பலைப்  பத்திரமாய்  
கரைக்குக்  கொண்டு   வந்து சேர்க்கிறது .

புத்தகங்கள்  அதுபோல,  நம்  வாழ்வை  நல்வழிப்படுத்தி
நம்மை  செதுக்குகிறது . 

நல்ல  நல்ல  நூல்களைத்  தேடித்  தேடி படிப்பதென்பது 
ஒவ்வொரு  நாளும்  நம்  அறிவை  வளர்த்துக்  கொள்வது .

படிப்பு  என்பது  கல்லுரி  நாட்களோடு 
முடிந்து   போகும்  பயணமல்ல .

வாசிக்கும்  பழக்கமென்பது , கொஞ்சம்  கொஞ்சமாக  
அவசர  உலகத்தில்  குறைந்து  போவது  வருத்தமளிக்கிறது .

விடிந்தால்  தூக்கு  தண்டனை, அந்நிலையிலும்  இரவு  முழுவதும்  
தனக்குப்  பிடித்த  புத்தகத்தைப்  படித்து  முடித்தான்
மாவீரன்  பகத்சிங்  

போர்க்களத்தில்  எதிரியோடு  சண்டையிடும்  போதும்  
யுத்த  பூமியில்  இரவுநேரத்தில்  புத்தகங்களைப்  படித்தான் 
ஹிட்லர் 

தமிழகத்தில்  திராவிடத்தின்  தடத்தினை  அழுத்தமாகப்  பதித்த  
பேரறிஞர்  அண்ணா  தன்  உடல் நலம்   பாதித்து  

அறுவை  சிகிச்சைக்கு  அழைத்தபோது  தான்  
படித்துக்கொண்டிருக்கும்  புத்தகத்தை  முழுவதுமாக  
படித்து விட்டு வருவதாகச்  சொன்னார் .

உங்கள்  ஓய்வு  நேரத்தில்  கொஞ்ச  நேரத்தை  உங்களுக்குப் 
பிடித்த  விஷயத்தை  படிக்க ஆரம்பியுங்கள் 

நூலகத்திற்குச்  சென்று  படிக்கும்  பழக்கத்தை  
வழக்கமாக்கிக்  கொள்ளுங்கள்  

நம்  வாழ்வை  வளப்படுத்த,  வழிகாட்ட  நமக்காக  
புத்தகங்கள்  காத்துக்  கொண்டிருக்கிறது 

எடுத்துப்  படிப்பவரையெல்லாம்   புகழின்  உச்சிக்கு  
கொண்டு  சென்று  தன்  நன்றியை  பறைச்  சாற்றுகிறது 

---த .சத்தியமூர்த்தி    

Saturday, 5 March 2022

Pennukku Pidithavai-3

பெண்ணுக்குப்  பிடித்தவை -3 

அம்மா  என்று  குழந்தைக்   கூப்பிட  தன்  
உயிரே  தன்னைக்   கூப்பிட்டதைப்   போல  பிரியம்

கொஞ்சி , கொஞ்சி,  மழலை  மொழி பேசும் 
குழந்தையை  மடியில்  வைத்து  கொஞ்சி  மகிழப்   பிரியம் 

காலை  முதல்  இரவு  வரை  பம்பரமாய்  சுழன்று  
ஒவ்வொன்றையும்  பார்த்து  பார்த்து  செய்வதே  பெண்ணுக்குப்   பிரியம் 

பூப்போன்ற  மனம்  படைத்ததனால்  பூவையரை  பூச்சூடி
பூவோடு  ஒப்பிட்டு  மகிழ்கிறோம் 

தங்கமான  குணம்  படைத்ததனால்  தங்கத்தில்  
நகை  செய்து  பெண்ணுக்குச்  சூட்டுகிறோம் 

பிறந்தது  முதல்  தன் இறுதி  மூச்சு  வரைப்  பிறருக்காக 
வாழ்வதே  பெண்ணுக்குப்  பிரியம்  

மெழுகுவர்த்தியாய்  தன்னை  வருத்திக்கொண்டு  தன்  
குடும்பத்தைக்  காப்பதில்  கொள்ளைப்  பிரியம் 

தனக்காக  எதையும்  சேர்த்துக்கொள்ளாமல்  இருப்பதையெல்லாம் 
தியாகம்  செய்வதையே  பெருமையாய்  கருதப்  பிரியம் 

மண்ணையும்  தாய்  மண்  என்றே  சொல்கிறோம் 
நாட்டையும்  தாய்  நாடு  என்றே  சொல்கிறோம்  

குடும்பத்தைக்  காக்கும்  குல தெய்வமாக  பெரும்பாலும் 
பெண்  தெய்வத்தைப்  பெருமைப்படுத்துகிறோம்  

நமக்காக  வாழும்  பெண்குலத்தின்  ஆசைகளை 
முடிந்தவரை  நிறைவேற்றுவதே   
பெண்குலத்திற்கு  நாம்  செய்யும்  தலையாய  கடமையாகும் ..

-------த. சத்தியமூர்த்தி