Saturday, 27 March 2021

Penniyam Pesuvom part-6

 பெண்ணியம்  பேசுவோம் -6

பெண்  சிறார்களைப்   பச்சிளம்  பருவத்தில்  பாலியல் 
வன்மம்  செய்வது  சமீபத்தில்  அதிகமாய்   தொடருது..

மானிடம்  தொலைத்த  மனசாட்சியால்
வக்கிரபுத்தி  தலையெடுக்குது ..

பெண்ணாய்  பிறந்ததால்  இன்னும்  எத்தனை 
கொடுமைகளைத்  தான்  சந்திப்பது ..?

பெண்  பிள்ளை  பெற்றோர்  வயிற்றில்
நெருப்பைக் கட்டிக்கொண்டு வாழ்கிறார்கள் ..

பொள்ளாச்சி  போன்ற  சம்பவங்களால் 
வெட்கித்தலைகுனியும்  அளவிற்கு  தமிழகம்  தள்ளப்பட்டது ..

வெட்கமில்லாமல்  அதிகாரத்தைப்  பயன்படுத்தி 
குற்றவாளிகளைத்  தப்ப வைக்க முயல்கிறார்கள் ..

மனசாட்சியற்ற  இக்கயவர்களை  அரசியல் 
அரங்கிலிருந்து   அகற்ற வேண்டும் ..

ஜல்லிக்கட்டு  போராட்டத்தில்  
இரவும்  பகலும் 
பெண்களுக்கு   இளைஞர்கள் பாதுகாப்பாய் 
நின்றது  போல , 

ஒவ்வொரு குடிமகனும்  தன்  குடும்பத்தைப்   போல
அக்கம்  பக்கத்தில்  உள்ள  பெண்  பிள்ளைகளைப்  
பேணிக்  காக்க  வேண்டும் ..

கடுமையான  சட்டங்களைக்  கொண்டு
இக்கயமையை  ஒழிக்க  வேண்டும்..

ஒழுக்கத்தை  தன்  உயிரினும்  மேலாய் 
போற்றக்கூடிய   ஒப்பற்றக்  குடி
நம்  தமிழ்  குடி ..

அதன்  மான்பைக்  காப்போம்..

பெண்ணியம்  பேசப்படும் ...

---த .சத்தியமூர்த்தி 

Maanudam Tharippom part-4

                                        மானுடம்  தரிப்போம் -4

கல்லுக்குள்  ஈரம்  கசிவது  போல் 
நெஞ்சிக்குள்  கருணை  பிறந்தால் 
அன்பு  பிரகாசிக்கும்

இயற்கையின்  படைப்புகள்  எல்லாம் 
இன்றளவும்  தன்  தன்மை  மாறாமல்  உள்ளது 

உள்ளதையெல்லாம்  அள்ளித்தந்து 
எல்லோர்க்கும்  பொதுவில்  உள்ளது 

மனித   மனம் மட்டும் தான்  காலப்போக்கில்
தன்  சுயம்புவை  விட்டுவிட்டு
  ஒன்றையொன்று   ஏய்க்கப்பார்க்கிறது    

அகப்பட்டதையெல்லாம்  சுருட்டிக்கொண்டு 
ஆணவத்தின்  உச்சியிலே  அகம்பாவம்  கொண்டு 

அடுத்தவரை  வஞ்சித்து  அவசர  கதியிலே 
ஆளவட்டம்  போடுகிறது 

மாடமாளிகைகள்  கூடகோபுரங்கள் 
வான்முட்டும் அளவில்  கட்டிமுடித்தது 

வகை வகையாய்  அறுசுவை  உணவை
அடுக்கிவைத்து  ருசித்துப  பார்த்து  உடல் கொழுத்தது

எதையும்  யாரோடும்  பகிர்ந்து  கொள்வதில்லையென 
சத்தியம்  செய்து
 எல்லாம்  எனக்கேயென  பூட்டிவைத்தது 

தன்   உயிரைமட்டும்  பூட்டத்தெரியாமல் 
   கூடுவிட்டு  ஆவி  பிரிந்தபோது 

சேர்த்தப்பொருள்  எல்லாம்  வாய்விட்டு  சிரித்தது 

வாழ்ந்த  நாளில்  ஒரு நாள்  கூட
தர்மம்  செய்யாமல்  கருமியாய்  வாழ்ந்ததால் 

பாவி  ஒருவன்  மடிந்தான்  என்னும் 
பழிச்சொல்லோடு  வாழ்வு  முடிந்தது ..

மானுடம்  தரிப்போம் ..

--த .சத்தியமூர்த்தி  

 

Saturday, 20 March 2021

Maanudam Tharippom part-3

 மானுடம்  தரிப்போம் -3

முல்லைக்குத்   தேர்  ஈந்த  பாரிவள்ளல்
மயிலுக்குப்   போர்வை  போத்திய  பேகன் 
 
அவ்வைக்கு ஆயுள்வளர்க்கும் அதிசய 
நெல்லிக்கனி  தந்த  அதியமான் 

தஞ்சமடைந்த  புறாவுக்கு  தன்  தசையை 
தானமாய்  தந்த  சிபி  சக்கரவர்த்தி 

வாடிய  பயிரைக்  கண்டபோதெல்லாம் வாடினேன் 
என  பாடிய  வள்ளல் பெருமான்   

இவர்கள்  எல்லோரும்  நம்மைப்போல் 
மானிடர் தான்.. 

ஆபத்து  நேரத்தில்  குருதியை  
உவந்து  தந்த   கொடையாளர்கள் 

இவர்களுக்கு  மட்டும்  எப்படி  இந்த  
இதயம்  வாய்த்தது ?

அன்பு , கருணை , இரக்கம் இவை  தான் 
மனிதனின்  உண்மை  அடையாளம் 

காலப்போக்கில்  கொஞ்சம்  கொஞ்சமாய் மனிதர்கள்
சுயநலத்தால்  சுத்தமாய்  மொத்தமாய் 
மாறிப்போனார்கள் ..

காலில்  முள்  குத்த  கண் அழுவதைப் போல்
அடுத்தவர்  நிலைக்கண்டு  ஓடிச்சென்று 
உதவும்  உள்ளம்  பெறுவோம்..

தன்னைக்  கரைத்துக்கொண்டு 
வெளிச்சத்தைப்  பாய்ச்சுகின்ற 
 மெழுகினைப்  போல்

நமக்காக  மட்டும்  வாழாமல் 
சமூகத்திற்கும்  சேர்த்து  வாழ்வோம்

மனிதநேயம்  வளர்த்து  மக்கள்  
ஒருவருக்கொருவர்  ஆறுதலாய்  இருப்போம்..

மானுடம்  தரிப்போம்

--த. சத்தியமூர்த்தி   
 

 
  


     

Saturday, 13 March 2021

Maanudam Tharippom part-2

மானுடம் தரிப்போம் -2 

கள்ளமில்லா புன்சிரிப்போடு  
கை , காலை  ஆட்டி  புத்தம்  புது  பூவாய் 
மழலையாய்  மண்ணுக்கு  வந்தோம் ..

தாயின்  மடியை  அரவணைத்து 
மிரள  மிரள  இம்மண்ணைப்  பார்த்தோம்..

வளர , வளர , ஆசையில்  விழுந்து 
பேராசையை  தினம்  விதைத்து  
காம , கோப ,கொடூரத்தை  வளர்த்து,
 
மனதை  மயக்கும்  பணமெனும்  ஒற்றை 
மந்திரத்திற்குக்  கட்டுப்பட்டு  அதற்காக
  
நாயாய் , பேயாய் ,அலைந்து  திரிந்து ,
நய வஞ்சகங்கள் கோடி  புரிந்து ,
நல்லோர்  மனதை  நடுங்கச்செய்து..

தான் , தனது, தன்  குடும்பமெனும்  
குறுகிய  வட்டத்தில்  சுருங்கி 

சொந்த  பந்தங்களை  ஒதுக்கி 
உறவுகளை  உதறித்தள்ளி  

ராஜபோகமாய்  சில  காலம்  வாழ்ந்து 
பண்ணிய  பாவத்தின்  பலனாய்  

தேகப்பொலிவிழந்து  , குடும்பத்திற்கு  பாரமாகி 
பாயில்  விழுந்து , நோய் முற்றி  

வெறுங்கையோடு   மீண்டும்  
மண்ணுக்குள்  புதைந்தோம் !

மானிடா  ! 

உன்  பிறப்பின்  மகிமையைப்  பார்த்தாயா ?

யாருக்கும்  உன்னால்  ஒரு  பயனும்  இல்லையென்றால்
உன்  பிறப்பு  எதற்கு ?

பல  தலைமுறைக்கு  சொத்து  சேர்க்கும் 
கனவான்களே  ! 

கொஞ்சம்  எடுத்து  ஏழைக்கு  தர்மம்  செய்தால் 
உங்கள்  ஆஸ்தி  என்ன  குறைந்தா  போகும் ?

உங்கள்  அஸ்தியோடு  கூட  வருவது 
நீங்கள்  செய்த  தர்மம்  மட்டுமே !

மானுடம்  தொடரும்..

--த .சத்தியமூர்த்தி    
 
 

 



      

Saturday, 6 March 2021

Maanudam Tharippom part-1

மானுடம்  தரிப்போம்-1  

ஆயிரமாயிரம்  ஜீவ ராசிகளில் 
அரிது  அரிது  மானிடராய்  பிறத்தல்  அரிது 

எத்தனை  தவம் செய்து  இருந்தால் 
கிடைத்தற்கரிய  இம்  மானிடப்   பிறப்பு  கிட்டும் 

விதை  விழுந்து , முளைத்து , செடியாகி , மரமாகி 
காய்  தந்து , கனி  தந்து ,இளைப்பாற  இடம் தந்து 
தான்  பிறந்ததன்  பயனை
  செவ்வனே செய்தது ..

வானிலிருந்து  விழும்  மழைத்துளிகள்  மக்கள்  
தாகத்தைத்  தீர்த்து , தன்  வரவின்  
மகத்துவத்தைப்   பறைசாற்றியது ..

 ஆடு , மாடு ,கோழி,பன்றி ,அத்தனையும் 
மனிதனின்  நாவிற்கு  ருசியாகி 
வயிற்றுக்குள்  அடைப்பட்டுப் போனது ..

இயற்கையின்  படைப்புக்களை அதன்  அனுமதியின்றி 
கிடைத்ததையெல்லாம்  அனுபவிக்கும் 
அதிகாரத்தை  மனிதனுக்கு  யார்  தந்தது ?

சிரிக்கவும் , சிந்திக்கவும் , ஆற்றல்  படைத்த 
மனித இனம்  இந்த  பிரபஞ்சத்திற்கு  
திருப்பி  எதைக்  கொடுத்தது ?

சக மனிதனின்  சுக  துக்கத்தைக்  கண்டு  கொள்ளாத 
மனித  மனம்  பாறையாய்  உறைந்து  போனது  ஏன் ?

புழுவை விட  ஈனப்பிறவியா  மானிடப்பிறவி
 
எதைக்  கொண்டுவந்தாய்  
இருப்பதையெல்லாம்  இரும்புப்பெட்டிக்குள் 
பூட்டி  வைத்துவிட்டு  
எதைக்கொண்டு  செல்லப்போகிறாய் !    

வாழ்வின்  பயனை  அறிந்திடு  மானிடா..

மானுடம்   தொடரும் ..

----த .சத்தியமூர்த்தி