Saturday, 30 January 2021

Penniyam Pesuvom part-5

 பெண்ணியம்  பேசுவோம்-5

பெண்களின்  முன்னேற்றம் 
ஒட்டுமொத்த  சமூகத்தின்  முன்னேற்றம்  

வயதுக்கு வந்து பல  வருடம்  கடந்தும் 
வாலிபம்  கொஞ்சம்  கொஞ்சமாய்  கரைந்த போதும்

சமூகத்தைப் பிடித்த கொடிய  நோய் 
வரதட்சணையெனும்  பேராலே  பெண்ணை  வதைக்கிறது 

பருவம்  வந்து  பெண்கள்  படும்  பாடு
பணத்தாசைப்பிடித்த  பேய்களுக்கு  தெரியவா  போகிறது ?

நகை  நட்டு  தட்டு  முட்டு  சாமான்  கோட்டு  சூட்டு  
மண்டபம்   கச்சேரி  விருந்து  வண்டி  வாகனம் 
சீர்வரிசை  என  பட்டியலோ  நீள்கிறது ..

திருமணச்  சந்தையோ  திக்குமுக்காட  செய்யுது 
முடிந்தவரை  ஒட்டுமொத்தமாய்  கறக்கப்   பாக்குது ..

ஆணுக்கு  இணையாய்  பெண் பெரிய படிப்பு  படித்தபோதும் 
ஆணுக்கு  நிகராய்  பெண்  கை  நிறைய  சம்பாதித்தபோதும் 

கல்யாணப்   பந்தலிலே  மாப்பிள்ளைக்கு மட்டும் 
மகுடம்  சூட்டப்   படுகிறது 

பல  இலட்சங்கள் வாரி  இறைத்தப்  பின் தான்
பெண்ணின்  திருமணம்  மங்களமாய்  முடிகிறது 

காசில்லாக்   காரணத்தால்  பல  கன்னிப்பெண்ணின்  
வாழ்வு  கண்ணீரில்  கரைகிறது 

கார்பொரேட்   முதலைகளுக்காக   கறுப்புச்   சட்டங்களை  
விவாதமின்றி  நிறைவேற்றும்  மைய  அரசு
வரதட்சணைக்   கொடுமைக்கும்  இருக்கும் சட்டத்தை 
இன்னும்  கடுமையாக்கினால்  என்ன !!  

பொன்னகையை  வெறுத்து 
கன்னியின்  புன்னகையே  போதும்  
என்று சொல்லும்  அளவுக்கு
  ஆணின்  உள்ளம் மாறவேண்டும்   

பெண்ணியம்  பேசப்படும்...

---த .சத்தியமூர்த்தி 
 
  

Saturday, 16 January 2021

Penniyam Pesuvom part3

 பெண்ணியம்  பேசுவோம் -3

கேடு  கெட்ட  குடியாலே  சீரழிந்த 
குடும்பத்தின்  எண்ணிக்கையோ  ஏராளம் 

எல்லா  ஒழுக்கக் கேட்டிற்கும் 
பிதாமகனாய்  இருப்பது  மது  அரக்கனே !

ஜாதி , மதம் , இனம் , மொழி , கடந்து  
சமரசம்  உலாவும்  இடமே  டாஸ்மாக்  தான்

அந்தி  சாய்ந்தால்  அத்தனை  பேரும் 
அணி  திரள்வது  டாஸ்மாக்கிலே ..

  ஒட்டு மொத்த ஆண் வர்க்கத்தையும்  குறை  சொல்லவில்லை 
ஒருசிலரின்  வக்கிரப்புத்தியை எடுத்துச்சொல்கிறேன் ..

கஜானாவை  நிரப்ப  மாற்றுவழி  தேடாமல் அரசே 
நாடுமுழுதும்  டாஸ்மாக்கைத்  திறந்து  வைத்து 
தமிழரைத்  தள்ளாட  வைத்தார்கள் .

ஐந்தாண்டிற்கு  ஒரு முறை ஓட்டுக்கு  ஐந்தாயிரம் கொடுத்து 

ஒவ்வொரு  மாலையிலும்  குடிமகனிடம் குறைந்தது 
ஐநூறு  ரூபாய்  வசூலிக்கும்  

செப்படி  வித்தை  வெற்றிகரமாய்  தொடர்கிறது 

சாராய ஆலை  முதலைகளை   அரசியலில்  அதிகாரத்தில் 
அமர வைத்ததால்  
ஒரு தலைமுறையே அநியாயத்திற்கு 
குடிக்கு  அடிமையானது ..   

வருங்காலத்தைத்   தீர்மானிக்கும்  இளைய சமூகமே 
மதியை  மயக்கும்  மதுவுக்கு  
அடிமை  ஆகாதீர்கள் ..

பெண்ணியம்   பேசப்படும்  

---த.சத்தியமூர்த்தி   


Saturday, 9 January 2021

Penniyam pesuvom part-2

பெண்ணியம்  பேசுவோம் -2 

பெண்  தான் குடும்பத்தை  ஒருங்கிணைப்பவள்
 
பெண் தான்  குடும்பத்தை  அரவணைப்பவள்

பெண் தான்  குடும்பத்தின்  குத்து  விளக்கு

பெண்  தான்  குடும்பத்தின்  அச்சாணி 

பெண்  தான் குடும்பத்தின்  ஆணிவேர்
 
பெண்  தான்  குடும்பத்தின்  ஒட்டு மொத்த பலமே !

புகார்  பட்டிணத்திலும், குமரிக்கண்டத்திலும் 
கோலோச்சி   நாகரிகத்தின்  உச்சியிலே  நின்ற 
உலகத்தில்  தோன்றிய  முதல்  குடியாம்  
மூத்தக் குடியாம்   எம்  தமிழ்

குடிமக்களுள்  பலர்  மதியிழந்து  மதுவுக்கு 
அடிமையாகி  குடும்பத்தைத் தவிக்க விட்டார்கள் 

ஆலையில்  அகப்பட்ட  கரும்பு போல் 

அனலில்  மிதிப்பட்ட  புழு போல் 

குரங்கு  கையில்  கொடுத்த  பூ  மாலை  போல்
 
பொத்தி  பொத்தி  வளர்த்த  பெண்களெல்லாம் 
இக்கயவர்கள்  கையில்  சிக்கி  
சின்னா  பின்னமானார்கள் 

 ஒரு  நாளெல்லாம்  ஓடாய்  உழைத்து 
ஈட்டிய  பொருளின்  பெரும்பகுதியை  

ஒரு  நான்கு நிமிடத்தில்  டாஸ்மாக்கில் 
கொண்டு போய்  கொட்டி  

குடும்பத்தை  வறுமையின்  பிடியில்  
சிக்க வைத்தார்கள்     
 
தாமும்  உழைத்தால்  மட்டுமே  தள்ளாடும் 
தன் குடும்பத்தைக்  கரையேற்ற
கூலி வேலைக்கும்  தயாரானார்கள்  
நம்  தாய்மார்கள்.. .  
 
பெண்ணியம்  பேசப்படும் ...

---த .சத்தியமூர்த்தி 

Saturday, 2 January 2021

Penniyam pesuvom part-1

 பெண்ணியம்  பேசுவோம்-1 

ஒரு  பெண்ணின்  கருவில்  பிறந்து 
பெண்களோடு  இணைந்து  வளர்ந்து  

ஒரு பெண்ணைத்  திருமணம்  செய்துக் கொண்டு
பெண்பிள்ளைகளை  அடுத்தடுத்து  பெற்றெடுத்து 
பெண்களோடு  சேர்ந்து  பணியாற்றி
 
வாழ்நாள்  முழுவதும்    பெண்களோடு  பயணிக்கும் 

ஆணாதிக்கம்  என்னும்  வல்லாதிக்கத்தின்  பிடியில்
பெண்குலம்  படும்  பாடு  
அப்பப்பா !!!    ----பெரும்  பாடு..

இருபால்  பிறப்புக்கும்   இங்கே பொதுவாக பத்து மாதம்

இதில்  ஆணை  உயர்த்தி   பெண்ணைத்  தாழ்த்துவதேன் ??

ஆண்  பிறந்தால்  அமர்க்களம்  அட்டகாசம்  ஆரவாரம் ..
பெண்  பிறந்தால்  சோகம்  ஏக்கம்  பரிதாபம் ..
ஏன்  இந்த  மனோபாவம் ??

பெண்  குழந்தையைக்  குப்பையில்  எறியும்  கொடூரம்

தொடர்ந்து  பெண்பிள்ளையைப்  பெற்றதனால்
வாழ்வை  தொலைத்த  அபலைகள்  ஏராளம் 

குழந்தை  பெண்ணாய்  பிறக்க  பெண்  மட்டுமா  காரணம் ??
எதை  வைத்து  ஆணுக்கு  மறுமணம்  செய்கிறீர் ??

மணமுடித்து  கொஞ்சம்  நாளானால் 
குழந்தை  பிறக்கவில்லையென்றாலும் 
உடனே  அங்கும்  பெண்  மீது தான்  பழி ..

எல்லாவற்றுக்கும்  பெண்  மட்டுமா  குற்றவாளி ??

பெண்ணியம்  இன்னும்  பேசப்படும் ..

---த .சத்தியமூர்த்தி