Saturday, 28 November 2020

Piriyaa Vidai part-1

 பிரியா  விடை-1 

குயில்  கூவும்  சோலையிலே - என்  மனம் 
மகிழும்  வேளையிலே, 
இளைப்பாறக்  கண்ணயர்ந்தேன்

இதயத்தைத்  தொடும்  வகையில்  
இசையோடு  கலந்து வரும்
குரலோசை  தனைக்கேட்டு
  
குரல்  வந்த  திசை  நோக்கி
மெதுவாகத்தான்  நடந்தேன் 
அருகில்  நான்  சென்றவுடன், 

அதுவரையில்  வந்த  குரலோசைக் கேட்கவில்லை 
ஒருவரையும்  காணவில்லை - கால்  கடுக்க 
சோலை முழுதும் நான்  நடந்து  பார்த்தாலும் 
குரலுக்குரியவளை  பார்க்க  முடியவில்லை 

களைப்போடுக்  கண்மூடி  நிழலோரம்  நான்  கிடக்க 
தென்றலது  மெல்ல வந்து 
தேகமதை  தீண்டுவது  போல் ,

பசியோடு  இருந்தவனின்  பார்வை  முன் 
பழுத்த  மரம்  பாதையிலே முளைப்பது போல், 

தண்ணீருக்கு  அலைந்தவனின்  பார்வை  முன் 
தடாகமொன்று  தட்டுப்பட்டது  போல் ,

கடும்  வெயிலில்  நிழலுக்கு அலைந்தவன்  முன் 
பந்தலொன்று  பாதையிலே  தோன்றியது  போல், 

உள்ளங்கவர்ந்த  பெண்ணொருத்தி  மெல்ல  மெல்ல
என்  சிந்தையெல்லாம்   நிறைந்தது  போல்,

கண்டு வந்த  கனவொன்று  கண்  முன்னே 
உண்மையென  நேரில் வந்து  தோன்றியது போல் ,

ஆவலோடு அலை  பாய்ந்த  என்  கண் முன்னே 
அழகான  பெண்ணொருத்தி  அவதரித்தாள் !

பிரியா விடை  தொடரும் ....

----த.சத்தியமூர்த்தி  
  

Saturday, 21 November 2020

Thandanai

தண்டனை 

வணிகம் என்ற  பேராலே கொள்ளை  இலாபம்  அடித்து 
 பணம்  புரட்டும்  ஒரு சில  திருட்டுக்கூட்டம் 

இன்று   மாளிகையில்  குடியிருந்தாலும்  
காத்திருக்கு கை  விலங்கு 
இத்தகைய  கயவர்க்கு ..

பொருளை  எல்லாம்  பதுக்கி  வச்சி 
நேரம்  பார்த்து  விலையை  ஏற்றி  

ஏழை  மக்கள்  வயிற்றில்  அடிக்கும் 
வியாபாரத்திருடருக்கு
காத்திருக்கு  கை விலங்கு...

கலப்படங்கள் செய்வதையே 
தொழிலாகக்கொண்டு  

சமூகத்தைச்  சீரழிக்கும்  
சதிகாரக்கூட்டத்திற்கு 
சத்தியமாய்  தண்டனை  உண்டு...

எடைக்கல்லில்  மோசடி செய்து 
ஏமாற்றும்  வித்தையை  எப்படி 
வணிகம்  என்று  சொல்வது ?

நேர்மையாய்  வியாபாரம்  செய்தாலே 
நிறைய  இலாபம்  நிச்சயம்  உண்டு ..  

பரம்பரையாய்  தொடர்ந்து  இங்கு 
பரம்பரியமாய்  வணிகம்  செய்வோரும்  உண்டு..

அமைதியாய்  இன்றிருக்கும்  
அப்பாவி  பொது  ஜனங்கள்
 
தாங்கள்  ஏமாற்றப்படும் 
விவரமறிந்து  எழுந்துவிட்டால் 

அனல்  கக்கும்  எரிமலையாய் 
ஆர்ப்பரிக்கும்  கடலலையாய் 
சுழன்றடிக்கும்  சூறாவளியாய் 

மாறி விடும் கட்டம்  வந்தால்  
மாட்டிக்கொள்ளும்  திருடர் கூட்டம்
கூண்டுக்குள்  அடைபடும்.....

-----த .சத்தியமூர்த்தி    

Saturday, 14 November 2020

Naattu Nadappu-part7

நாட்டு  நடப்பு -7

இன்று  இனிய  தீபாவளி  திருநாள் 
இன்ப  தீபப்  பெருநாள் 

அசுரனை  அழித்து  அமைதி 
திரும்பிய  பொன்னாள் 

வறுமை  ஒழிந்து  வசந்தம்  வீச  
கட்டியம்  கூறும்  நன்னாள் 

கடைக்கோடி  மக்களும்  கட்டாயம் 
கொண்டாட  வேண்டிய  திருநாள் 

இல்லாமை  என்பது  இல்லாது  போக 
இருப்பவர்கள்  பகிர்ந்து  கொடுக்க  வேண்டிய  பெருநாள்
 
ஏழ்மையை  விரட்டி  ஏற்றத்தை  நோக்கி 
சமூகம்  பீடு  நடை  போட  துவக்க நாள் 

மனதில்  தோன்றும்  அசுர  எண்ணங்களை 
பொசுக்க  வேண்டிய  பொன்னாள் 

அனைவரையும்  சமமாய்  மதித்து  நடக்க
 ஆரம்பமாகும்  பெருநாள் 

பசியோடு  யாரும்  படுத்திடாமல் 
பார்த்து  உதவ  வேண்டிய  திருநாள் 
 
ஒற்றுமையோடு  மக்கள்  எல்லோரும் 
ஒருங்கிணைந்து  வாழத்துவங்கும்  நன்னாள் 

யாரும்  யாரையும்  ஏமாற்றாமல் 
 மனசாட்சியோடு  வாழ  ஆரம்பிக்கும்  பெருநாள் 

உழைப்பின்  மூலம்  உலகையாளும்  
சூத்திரம் சொல்லும்  திருநாள் 

எம்  மக்கள்  எல்லோர்க்கும்  
இனிய  தீபாவளி  நல்வாழ்த்துக்கள் ..


---த.சத்தியமூர்த்தி 
  

Saturday, 7 November 2020

Naattu Nadappu-part6

நாட்டு  நடப்பு -6 

தேர்தலின்  முடிவை  இனி  பணமோ , ஜாதியோ 
மதமோ  முடிவு  செய்யக்கூடாது - அதற்கு

குறைந்தது  70 - 75 சதவீதம்  வாக்குப்பதிவை 
நாடெங்கும்  நடத்திக்காட்டுங்கள் 

மக்களிடமிருந்து  உண்மையான  மக்களின் 
 பிரதிநிதிகளை  தேர்ந்தெடுங்கள் 

இனி  யாராலும்  எங்களைப்  பிரித்தாள்வதோ 
விலைகொடுத்து வாங்குவதோ  நடக்காது 
என்று  நடந்துக்காட்டுங்கள் 

ஆதிக்க  சக்திகளை  வீழ்த்துவதற்கு   ஆயுதமாக
உங்கள்  வாக்குரிமையைப்  பயன்படுத்துங்கள் 
 
உண்மையான  ஜனநாயகம்  இந்தியாவில்  மலர்ந்ததென்று 
உலகிற்கு    உரத்தக்குரலில்   எடுத்துச்சொல்லுகள்

வறுமைக்கு  விடைகொடுத்து  புது 
 வாழ்வுக்கு  வழி  காணுங்கள் 

மாநில  உரிமைக்குக்  குரல் கொடுத்து 
  மக்களிடையே  விழிப்புணர்வை  ஏற்படுத்துங்கள் 

பரவட்டும்  வெளிச்சமிங்கு  மக்களின்  
அறியாமை  இருள்  கிழித்து  

ஒழியட்டும்  முதலாளித்துவ  
மனசாட்சியற்ற  மார்க்கமிங்கு

தோன்றட்டும்  மக்களிடையே  
எழுச்சியென்னும்   புது  வெள்ளம் 

நாட்டு  நடப்பு  தொடரும்...

-----த .சத்தியமூர்த்தி